இலங்கையில் தமிழர்கள் இப்பொழுது எதிர்கொள்ளும் சவால்கள் எவை எவையென்று தெரியுமா?

ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படவில்லை. தொடர்ந்து வந்த அரசாங்கமும் தமிழ் மக்கள் மீது சுமைகளைத்தான் ஏற்றுகின்றது.

மரம் ஏறி விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதையாகவே தமிழ் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை போய்க் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 2017ம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இதன் இரண்டாவது வாசிப்பு மீதான மூன்றாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,

யுத்தம் முடிந்து ஏழரை வருடங்களுக்குப் பின்னரும் தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை என்பது தீர்க்கப்படாத பிரச்சினையாகவே இருக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்பு, தமிழ் மக்களின் காணிகளைச்சூறையாடுதல் வடக்கு-கிழக்கில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து எந்தவொரு ஆக்கபூர்வமான எதுவித சிந்தனையும் இல்லாத சூழல் தொடர்ந்து நீடிக்கின்றது.

கடந்த காலங்களில் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பாகவும் கடத்தப்பட்டோர் தொடர்பாகவும் கைது செய்யப்பட்டோர் தொடர்பாகவும் எந்தவிதமான பொறுப்புக்கூறலுமற்ற ஒரு அரசாங்கம் ஆட்சிப்பீடத்தில் இருக்கின்ற நிலை, ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் கூட அதனை நிராகரிக்கின்ற ஆட்சியாளர்கள் அரியாசனத்தில் உள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் குறித்து பேசுவது , அர்த்தமற்றது.

புதிய விகாரைகளின் தோற்றம்..

வடக்கு, கிழக்கில் புதிது புதிதாக விகாரைகள் கட்டப்பட்டுவருகின்றன. குறிப்பாக தமிழ் மக்கள் வாழக்கூடிய இறக்காமம் மாணிக்கமலையில் புத்தர் சிலை, தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற திருகோணமலை சாம்பல் தீவில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

வடக்கு மாகாணம் முழுவதும் புதிய புதிய விகாரைகளும் புதிய புத்தர் சிலைகளும் தோன்றுகின்றன.

இதேவேளை, வீதிகளுக்கு இராணுவ அதிகாரிகளின் பெயர்களை வைத்து அடையாள மாற்றம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

எமது வாழ்வாதாரத்தை சிதைக்கும் இன்னொரு பிரச்சினையும் இப்பொழுது தலைவிரித்தாடுகின்றது. வடக்கு-கிழக்குக் கடலில் சிங்கள மீன்வர்களின் மீன்பிடி முறைகள் என்பன அரசாங்கத்தின் சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இதன் மூலம் இலங்கை ஒரு பௌத்த நாடு தமிழர்கள் உள்ளிட்ட ஏனையவர்கள் எமக்கு அடங்கி இரண்டாம் தரப்பாகவே என்றும் இருக்கவேண்டும் என்ற எண்ணப்பாட்டை பகிரங்கப்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தினார்.

நாட்டில் சிங்கள தமிழ் கால் பந்தாட்டப் போட்டிகளும், சிங்கள தமிழ் கலாசார விழாக்களும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்க மாட்டாது.

மிகப் பெரிய அழிவுகளைக் கொண்ட யுத்தம் நிகழ்ந்து பல இலட்சம் மக்களை இழந்து, பொருளாதாரத்தில் முடங்கிப்போயிருக்கக்கூடிய வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்கு சிறப்பான திட்டம் எதுவும் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை.

நாட்டில் இதுவரை நடந்த யுத்தம் காரணமாக 80ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களைத் தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் வடக்கு-கிழக்கில் வாழ்ந்துகொண்டிருக்கின்றன.

பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பெரியோர்கள் அங்கவீனமுற்றவர்களாக இருக்கின்றார்கள். இன்னும் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாக நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.

அதுமாத்திரமன்றி யுத்த விமானங்களுக்கும், யுத்த தாங்கிகளுக்கும், படகுகளுக்கும், கப்பல்களுக்கும் அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனுக்கு தமிழ் மக்களும் வரிசெலுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

வடக்கில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது உடலின் பல பாகங்களில் செல்துகள்கள் மற்றும் துப்பாக்கி இரவைகள் போன்ற இன்னோரன்ன உலோகத்துண்டுகள் இன்னமும் அகற்றப்படாமல் உள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இது குறித்து தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றபோதிலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இந்த ஆட்சியிலும் மேற்கொள்ளவில்லை எனக் குறிப்பிட்ட அவர்,

இன்று ஆளும் தரப்பாக இருக்கும் இரண்டு பிரதான கட்சிகளை சேர்ந்த எந்தவொரு முக்கியஸ்தர்களும் புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்படுவதாக வெளிப்படையாக கூறவில்லை.

புதிய அரசியலமைப்பு உருவாக்கமா அல்லது தற்போதைய அரசியலமைப்பில் சீர்திருத்தமா என்பது கூட தெளிவற்ற நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

2016 ஆம் ஆண்டிற்குள் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையினால் எமக்கும் எமக்கு ஆணையளித்த மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என கூறப்படுகின்றது.

கடந்த ஆட்சியாளர்கள் எம்மையும் எமது மக்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்ததன் விளைவாலேயே அரியாசனத்தை விட்டு அசைக்க முடியாத நிலையில் இருந்தவர்கள் ஒரே இரவில் அனைத்தையும் இழந்து நிற்கின்றார்கள்.

ஆகவே மக்கள் சக்திக்கு முன்னால் அனைத்துமே காணமல்போய்விடும் என்பதற்கு எம் கண்முன்னேயே தக்க உதாரணம் இருக்கின்றது.

இதேவேளை அரசாங்கத்தின் தெளிவற்ற போக்கும், வடக்கில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட இனச்சுத்திகரிப்புக்கு எதிராகவே எழுக தமிழ் பேரணி இடம்பெற்றதாகவும், அத்தகைய எழுச்சியை உதாசீனம் செய்து, எவ்வாறு இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்க முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பினார்.