வித்தியா கொலை வழக்கு சந்தேகநபர்களின் வங்கி தரவுகளை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் வங்கி தரவுகளை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் தொடர்பில் 14 வங்கிகளிடமிருந்து தரவுகளை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(15) கோரிக்கை விடுத்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

மேலும் இவர்களின் கோரிக்கைக்கு அமைய ஊர்காவற்துறை நீதவான் ஏ.எல்.எம் றியால் இன்று அதற்கான அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையுடன் தொடர்புடைய 12சந்தேகநபர்களின் விளக்கமறியலும் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சந்தேகநபர்களை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் ஏ.எல்.எம் றியால் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, யாழ்ப்பாணம் புங்குடுதீவில, மாணவி வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.