மத்திய வங்கியை தனியார்மயப்படுத்தினால் மக்கள் பாதிக்கப்படுவர்!- மஹிந்த ராஜபக்ச

மத்திய வங்கியை தனியார் மயப்படுத்தினால் நிதி முறைமையே வீழச்சியடைந்து விடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

மத்திய வங்கியினால் ஆற்றப்படும் பணிகள் வெளித் தரப்புக்களுக்கு வழங்கப்படுது தேசிய குற்றமாகும்.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.

ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மத்திய வங்கியை தனியார் மயப்படுத்த எடுத்துள்ள தீர்மானம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

மத்திய வங்கி தனியார் மயப்படுத்துவது நிறுத்தப்படுவதன் மூலம் நாட்டு மக்களுக்கு நன்மைகள் ஏற்படும்.

இவ்வாறு தனியார் மயப்படுத்தப்படுவதனால் பாரியளவு கொள்ளைகள் இடம்பெறக்கூடும்.

நாட்டின் முழு நிதி முறைமையும் வீழ்ச்சியடைவதுடன் நிதி முறைமை குறித்த நம்பிக்கையும் வீழ்ச்சியடையும்.

மத்திய வங்கியின் மீதான நம்பிக்கை காரணமாகவே நாம் மத்திய வங்கியுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்றோம்.

எமது ஆட்சிக் காலத்தில் மத்திய வங்கிக்கு ஸ்திரமான ஓர் நிலையை ஏற்படுத்திக் கொடுத்தோம்.

மத்திய வங்கியின் நிதிச் சபை விவகாரத்தில் தலையீடு செய்ததில்லை.எனினும் இன்று நிலைமை தலைகீழாக மாற்றமடைந்துள்ளது.

மத்திய வங்கி தனியார் மயப்படுத்தப்பட்டால் ஒட்டுமொத்த மக்களின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களும் பாதிப்புக்கு உள்ளாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.