போக்குவரத்து தண்டப்பணம் 2500இல் மாற்றமில்லை- ரவி

அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில், போக்குவரத்துச் சட்டம் மீறப்படுவதற்கான குறைந்த பட்ச தண்டப்பணமாக அறிமுகம் செய்துள்ள 2,500 ரூபாவில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்போவதில்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று (13) தெரிவித்துள்ளார்.

குறித்த அபராதத் தொகையை குறைக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள வேண்டுகோள் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த சட்டத்தின் மூலம் பல்லாயிரக் கணக்கான பயணிகள் மற்றும் பாதசாரிகளின் உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரவு செலவுத் திட்ட யோசனையில் அறிமுகம் செய்துள்ள புதிய அபராதத் தொகையை குறைக்காவிட்டால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (15) முதல் நாடு தழுவிய பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.