கப்பம் பெறும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்தோம்: சந்திரிக்கா

நாட்டில் காணப்பட்ட கப்பம் பெறும் யுகத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணமாக தாம் சுதந்திரமாக மூச்சு விடுவதாக கூறி, வர்த்தகர்கள் சிலர் தன்னை சந்தித்து தனக்கு நன்றி கூறியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

வெயங்கொடை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

வெயங்கொடை, நிட்டம்புவ பிரதேசங்களில் உள்ள சகல வர்த்தகர்களையும் கொலை செய்வதாக அச்சுறுத்தி கடந்த காலத்தில் கப்பம் பெற்றனர்.

அதிகாலை இரண்டு, மூன்று லட்சம் ரூபாவை கொண்டு வந்து தராவிட்டால் கொன்று விடுவோம் என்று மிரட்டி கப்பம் பெற்றனர்.

வெயங்கொடை மற்றும் நிட்டம்புவ பிரதேசங்களில் வர்த்தகம் செய்வோரில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், வர்த்தர்கள் என்னை சந்தித்து ஜனவரி 8 ஆம் திகதிக்கு பிறகுதான் தாம் பயமின்றி, சுதந்திரமாக வர்த்தகம் செய்வதாக கூறினர்.

முன்னாள் அமைப்பாளரின் ஆதரவாளரான பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது சகாக்கல் ஆகியோர் வர்த்தகர்களை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு நாளை காலை எமக்கு 2 லட்சம், மூன்று லட்சம் ரூபா வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர். ஒரு வர்த்தகரிடம் 6 லட்சம் ரூபா கோரியுள்ளனர்.

தனக்கு அந்தளவு பணத்தை தரமுடியாது, அப்படி வழங்கினால் தான் வர்த்தகத்தை மூடிவிட வேண்டும் என்று அந்த வர்த்தகர் கூறியுள்ளார்.

ஒரு வாரம் காலஅவகாசம் வழங்கியுள்ளனர். ஒரு வாரம் கடந்தும் அவர் பணத்தை கொடுக்கவில்லை. இதனையடுத்து அவரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு நாளை காலை 6 லட்சம் பணத்தை கொண்டு வந்து தரவில்லை என்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.

அந்த வர்த்தகர் மனைவி மற்றும் பிள்ளைகளை கைவிட்டு பிரதேசத்தை விட்டு சென்றுவிட்டார். அரசாங்கம் மாறும் வரை அவர் வரவில்லை.

ஏனையோரின் நிலைமையும் இதுதான். நண்பர்களே தற்போது அத்தனகல்லயில் கப்பம் பெறும் யுகம் முடிந்து விட்டது என சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.