மோடியின் அடுத்த அதிரடி அறிவிப்பு!!ஜப்பானில் வைத்து முழங்கினார்!!

500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த சில நாட்களில் 3 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் புறப்பட்டு சென்றார்.

பயணத்தின் 2வது நாளான நேற்று முன்தினம் பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே சந்திப்பு நடந்தது.

இதில் வரலாற்று சிறப்பு மிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதைத் தொடர்ந்து பயணத்தின் கடைசி மற்றும் 3ம் நாளான நேற்று தலைநகர் டோக்கியோவில் இருந்து கோபே வரை மோடியும், அபேயும் புல்லட் ரயிலில் பயணம் செய்தனர்.

கோபேயில், ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கூறியதாவது,

அதிக மதிப்பிலான பணத்தை திரும்ப பெறும் திட்டம் மிகப் பெரிய தூய்மை நடவடிக்கை.

இப்பணி டிசம்பர் 30ம் தேதி முடிவடைந்தபின், கருப்பு பணத்தை பதுக்கியவர்களுக்கு தண்டனை தருவதற்கான புதிய நடவடிக்கை பாயும்.

கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டால், சுதந்திரம் பெற்றதில் இருந்து அவர்களது ஆவணங்கள் தோண்டி துருவி விசாரிக்கப்படும்.

கருப்பு பணம் ஒழியும் வரை அரசின் கடும் நடவடிக்கை தொடரும் அதை நாங்கள் நிறுத்த மாட்டோம்.

தப்பவே முடியாது என்னைப் பற்றி அறிந்த சிலர் புத்திச்சாலித்தனமாக, கருப்பு பணத்தை வங்கியில் போடுவதற்கு பதிலாக கிழித்து கங்கையில் போட்டிருக்கிறார்கள்.

எனவே, கருப்பு பணத்தை பதுக்கிய யாரும் தப்பவே முடியாது.

அதே நேரத்தில், நியாயமானவர்கள் எந்த தர்மசங்கடத்துக்கும் ஆளாக மாட்டார்கள்.

2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்களிடம் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.

அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்தால் எந்த தொந்தரவும் இருக்காது.

தாயை முதியோர் இல்லத்தில் தவிக்க விட்ட மகன் கூட, தனது தாய் வங்கி கணக்கில் 2.5 லட்சத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம் (இதற்கு அனைவரும் சிரித்தனர்).

மக்களுக்கு நன்றி, நாட்டை சுத்தப்படுத்தும் இந்த திட்டம், ஒரு மாபெரும் தூய்மை நடவடிக்கை.

இதற்கான அறிவிப்பை வெளியிட்டதும், பல கஷ்டங்கள் இருந்தாலும், அதை உத்வேகத்துடன் ஏற்றுக் கொண்ட நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன்.

மக்கள் ஏடிஎம்களிலும், வங்கிகளிலும் 4, 5 மணி நேரம் கால் கடுக்க வரிசையில் தவிக்கிறார்கள்.

பலர் திருமண நிகழ்ச்சிகளை நடத்துவதிலும், மருத்துவ செலவுகளுக்கும் பல இன்னல்களை சந்தித்தார்கள்.

ஆனாலும், நாட்டு நலன் கருதி, அதை எல்லாம் சகித்து கொண்டு, அவர்கள் அரசின் முடிவை வரவேற்றதற்கு நன்றி.

இந்த விஷயத்தில் ஜப்பானை நம் மக்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

2011ல் ஜப்பான் சுனாமி, நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் நாட்டு நலன் கருதி பல விஷயங்களில் மக்கள் அனுசரனையுடன் நடந்து கொண்டார்கள்.

பொறுமையை கடைபிடித்தார்கள். சில மாதங்களிலேயே இழப்புகளை ஈடு செய்தார்கள்.

இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு முன், மிக நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது.

மக்களின் சிரமத்தை குறைக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சியையும் அரசு மேற்கொண்டுள்ளது.

அதே போல, ரகசியத்தையும் பேணி பாதுகாத்தது. இந்த திட்டம் அறிவிக்கப்படும் வரையிலும் இதைப் பற்றி எந்த தகவலும் கசிந்து விடவில்லை.

அதிரடியாக இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனே, மக்களிடமிருந்து இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை.

இதுபோல அரசின் முயற்சிகளுக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டுமென்பதே எனது வலியுறுத்தல்,இவ்வாறு பிரதமர் மோடி ஜப்பானில் வைத்து தெரிவித்துள்ளார்.