மத்தளயில் இருந்து சேவைகளை நடத்த மறுக்கும் சர்வதேச விமான நிறுவனங்கள்

பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படும் காலத்தில் மத்தள விமான நிலையத்தில் இருந்து விமான பயணங்களை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு விமான சேவைகளிடம் அரசாங்கம் விடுத்த கோரிக்கையை அவை நிராகரித்துள்ளதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடு பாதை கடந்த 20 வருடங்களாக புனரமைக்கப்படவில்லை. இதனால், 50 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஓடு பாதையை புனரமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

மத்தள விமான நிலையத்தில் இருந்து பயணிகளுக்கான சேவைகளை நடத்துமாறு அரசாங்கம் விடுத்த கோரிக்கையை, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் உட்பட 45 நிறுவனங்கள் முற்றாக நிராகரித்துள்ளன.

மத்தள விமான நிலையத்திற்கு அருகில் பறவைகள் பறப்பது மற்றும் தொலைவு உட்பட பல காரணங்களை இந்த நிறுவனங்கள் முன்வைத்துள்ளதாகவும் அசோக அபேசிங்க கூறியமை குறிப்பிடத்தக்கது.