கார்த்திகை 27 திட்டமிட்டு குழப்பப்படும்-இன்னும் என்னென்ன உருவாக்கப்படுமோ?-அச்சத்திலும் ஏக்கத்திலும் ஈழமக்கள் !!

தற்போதைய காலகட்டத்தில் வடக்கு புரியாத ஒரு திசையிலேயே பயணம் செய்து கொண்டு வருகின்றது என்பது அண்மைக்கால அவதானிப்புகள் மூலமாக தெளிவாகின்றது.

குறிப்பாக யாழ்ப்பாணம் பல்வேறுபட்ட விமர்சனங்களும் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளுக்கும் முகம் கொடுத்து வரும் நிலையில் வடக்கை பயங்கரவாத இருப்பிடமாக சித்தரிக்க பல சக்திகள் ஒன்றிணைந்து செயற்பட்டு வருவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மையில் யாழில் மரணமடைந்த மாணவர்களுக்கு பிறகு வாள்வெட்டு குழு ஒன்று பிரபல்யமானது, அதற்கு ஆவா என பெயரிடப்பட்டு பிரபல்யமாக்கப்பட்டு வருகின்றது.

தென்னிலங்கை தரப்பில் குறித்த ஆவா குழு தொடர்பில் இரு வகையிலான கருத்துகள் பரப்பப்படுகின்றது.

மௌனித்த விடுதலைப்புலிகள் ஆவாவின் மூலமாக மீள் உருவாக்கம் எடுத்துள்ளார்கள் என ஒரு சாரரும், இராணுத்தில் உள்ளவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சதிச் செயலே ஆவா குழு என ஒரு தரப்பும் கூறிக்கொண்டு வருகின்றது.

இங்கு வேடிக்கையான விடயம் என்னவெனில் நாட்டில் முக்கிய அமைச்சர்கள் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருத்துகள் வெளிப்படுத்தும் போது ஆவாவில் விடுதலைப்புலிகள் இல்லை கொள்ளைக் கூட்டமே அது என அடித்து கூறிக்கொண்டு வரும் வேளையில்,

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுடன் இணைந்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணி அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கு உதவி ஒத்தாசை புரியும் முகமாக ஆவா எனும் பெயரில் ஆயுதக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. என பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அறிக்கை விடுத்துள்ளனர்.

இவை இவ்வாறு இருக்க மற்றொரு பக்கம் யாழில் அன்றாடம் பல கைதுகள் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றது. அந்த கைதுகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது ஒன்று ஆவா, மற்றொன்று விடுதலைப்புலிகள். இதன் மூலமாக அடுத்து வடக்கில் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது பயங்கரமாக உருவெடுக்கும் என்பதே உண்மை.

நாட்டில் பொலிஸார் ஒருகருத்தும் இராணுவம் வேறுபட்ட கருத்தையும் வெளிப்படுத்தி கொண்டு வரும் வேளையில் அமைச்சர்களும் தலைமைகளும் மாற்றுக்கருத்துகளை கூறி வருகின்றனர்.

இதில் எதனை நம்புவது என தெரியாத குழப்ப நிலையில் மக்கள் இருக்கும் சமயத்தில் தென்னிலங்கை தரப்பு மட்டும் விடுதலைப் புலிகளையும் முன்னாள் போராளிகளையும் மறந்து விடவில்லை.

யுத்தம் நிறைவு பெற்று ஏழு ஆண்டுகள் கடந்து விட்டபோது, குறிப்பாக ஆட்சி மாற்றம் அடைந்து விட்ட நிலையில் விடுதலைப்புலிகள் என்ற பயம் மக்கள் மத்தியில் வழுக்கட்டாயமாக திணிக்கப்பட்டு வருகின்றது என்பதே நிதர்சனம்.

இவற்றினை தொகுத்து நோக்கும் போது அண்மைக்கால இலங்கை அரசியல் வடக்கை குறிவைத்து நகர்த்தப்பட்டு வருகின்றது என தெளிவாகின்றதாக அரசியல் நோக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், யாழில் மாவீரர் தினம் அண்மித்து வரும் போது அதனை குழப்ப பிரபாகரன் படை என்ற ஒன்று உருவெடுத்து வந்து பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும் தற்போது அந்த விடயம் மறக்கப்பட்டுவிட்டது அல்லது மறைக்கப்பட்டு விட்டது என்றும் கூறலாம்.

தனிப்பட்டவர்களின் அரசியல் இலாபத்திற்காக வடக்கை திட்டமிட்டு அழிக்க முயற்சித்து வருகின்றனர் ஒரு சிலர். அதேபோன்று வடக்கில் அண்மை நாட்களாக இராணுவத்தினரின் ஆதிக்கமும் அதிகரித்து வரும் நிலையில், கார்த்திகை 27ஆம் திகதி எவ்வாறு அமையப்போகின்றது என்பது மட்டும் மர்மமாகவே இருக்கின்றது.

இவை இவ்வாறிருக்க ஒரு பக்கம் ஆவா, மறுபக்கம் பிரபாகரன் படை, என புதிது புதிதாக குழுக்கள் உருவாகி வருகின்றது. போதாக்குறைக்கு இராணுவம், பொலிஸார் போன்றோரும் வடக்கில் அதிகமாக நிலைகொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் கழுகுக்கண் பார்வையில் தற்போது வடக்கு சிக்கியுள்ளதாகவும், நாட்டையும் வடக்கின் அமைதியையும் குழப்பும் நோக்கில் சில சதியாளர்கள் திட்டமிட்டு நாடகங்களை அரங்கேற்றி வருவதாகவும் தென்னிலங்கை புத்தி ஜுவிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.