‘தற்கொலை’க்கு முன் என்ன நடந்தது? திருநங்கை தாரா விவகாரப் பின்னணி

சென்னை பாண்டிபஜார் காவல் நிலையத்தில் திருநங்கை தாரா தீக்குளித்து தற்கொலைசெய்துகொண்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை சூளைமேடு, நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் திருநங்கை தாரா. இவர், இன்று அதிகாலை பாண்டிபஜார் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சகோதரன் என்ற அமைப்பின் பொது மேலாளர் ஜெயா கூறுகையில், “தாராவின் மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை, பாண்டிபஜார் போலீஸார் எதோ ஒரு காரணத்துக்காக கைப்பற்றியுள்ளனர். அதுதொடர்பாக அவர், இன்று அதிகாலை 5 மணியளவில் பாண்டிபஜார் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது அங்குள்ள போலீஸார், தாராவை தகாத வார்த்தையால் பேசியுள்ளனர். இதில் மனமுடைந்த தாரா, பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துள்ளார். போலீஸ் நிலையத்தின் எதிரிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸார், தாராவைப் பார்த்து செத்துப்போ என்று கூறியதோடு, நெருப்பை அணைக்க மணலை அவர் மீது போட்டுள்ளனர். மேலும், உடனடியாக அவரை மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லவில்லை. இதனால் தாரா இறந்து விட்டார்.

தாராவுக்கு வேலைவாய்ப்பு எதுவும் இல்லை. இதனால் அவர் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். பொதுவாக இந்த சமுதாயத்தில் திருநங்கைகள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். குறிப்பாக வாடகைக்கு வீடு கேட்டால் கூட மற்றவர்களை விட இரண்டு மடங்கு வாடகை வசூலிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு இல்லாததால் பாலியல் மற்றும் பிச்சை எடுக்கும் தொழிலுக்கு திருநங்கைகள் தள்ளப்படுகின்றனர். இந்த தொழிலை விருப்பம் இல்லாமல் அவர்கள் செய்து வருகின்றனர். திருநங்கைகளுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கினால் இதுபோன்ற தொழிலில் அவர்கள் ஈடுபடுவது குறையும். மேலும், திருநங்கைகளை போலீஸார் மதிப்பதில்லை.

உதாரணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பு திருநங்கைகளின் செல்போன் நம்பர்களில் பேசிய சைக்கோ வாலிபர் அவர்களை அசிங்கமாக திட்டினார். இதுதொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போதுகூட தாராவை தகாத வார்த்தையால் திட்டியதால் அவர் போலீஸ் நிலையம் முன்பே தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்ற கூட போலீஸார் முயற்சிக்கவில்லை. இதைக்கண்டித்து பாண்டிபஜார் போலீஸ் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “தி.நகர் ஹபிபுல்லா சாலையில் நேற்றிரவு பாலியல் தொழில் நடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற போது அங்கு திருநங்கைகள் சிலர் நின்றனர். அவர்களை கலைந்து செல்லும்படி தெரிவித்தோம். அப்போது குடிபோதையில் இருந்த சில திருநங்கைகள் எங்களிடம் தகராறு செய்தனர். இதனால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தையும், செல்போனையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தோம். இன்று அதிகாலை போலீஸ் நிலையத்துக்கு வந்த தாரா, பணியில் இருந்த போலீஸாரை தகாத வார்த்தையால் பேசினார். அப்போதுகூட நாங்கள் அமைதியாக இருந்தோம். போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே சென்ற தாரா, தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரை காப்பாற்ற முயற்சித்தோம். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

தாராவின் தற்கொலை சம்பவத்தால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், பாண்டி பஜார் போலீஸ் நிலையத்திலும் திருநங்கைகள் திரண்டுள்ளனர். இதையொட்டி அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.