சென்னை பாண்டி பஜாரில் போலீஸ் நிலையம் முன்பு திருநங்கை தீக்குளித்து பலி

பாண்டிபஜார் திருமலைப் பிள்ளை தெருவில் இன்று அதிகாலை 4 திருநங்கைகள் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாண்டி பஜார் சப்-இன்ஸ்பெக்டர் டில்லி, போலீஸ்காரர் மணி கண்டன் மற்றும் போலீசார் ரோந்து வாகனத்தில் வந்தனர்.

சந்தேகத்தின் பேரில் திருநங்கைகளிடம் போலீசார் விசாரித்தனர். அப்பொழுது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் தள்ளு முள்ளும் ஏற்பட்டது.உடனே 3 திருநங்கைகள் தப்பி ஓடி விட்டனர்.

சூளைமேடு நமச்சிவாய புரத்தை சேர்ந்த திருநங்கை தாரா (வயது 40) தனது மொபட்டுடன் நின்று கொண்டிருந்தார். அவரை மொபட்டுடன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அதிகாலை 4.30 மணிக்கு போலீசார் தாராவை வீட்டுக்கு சென்றுவிட்டு காலையில் வந்து மொபட்டை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினர்.

அதற்கு தாரா மறுப்பு தெரிவித்து மொபட்டை உடனே தரும்படி கேட்டார். போலீசார் மறுத்து விட்ட தால் ஆவேசத்துடன் வெளியே சென்ற அவர் அருகில் இருந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வாங்கி வந்து போலீஸ் நிலையம் முன்பு திடீரென பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

எரியும் தீயுடன் அவர் அலறி துடித்ததை பார்த்த போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.தீயை அணைத்து கீழ்பாக்கம்  அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி காலை 10.30 மணிக்கு தாரா இறந்தார்.

திருநங்கை தாரா தீக்குளித்ததை அறிந்த திருநங்கைகள் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரி முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்த முயன்ற போது திருநங்கைகள் தாக்கவும் முயற்சித்தனர்.  இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

அப்போது தாரா பலியான தகவல் அறிந்ததும் திருநங்கைகளின் ஆவேசம் அதிகமானது. அவர்கள் போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மறியலும் செய்தனர்.
இதனால் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரி முன்பு பெரும் பதட்டம் நிலவியது. போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தடுப்புகளை மீறி ஆவேசத்துடன் சென்ற அவர்களை போலீசார் தடுத்தனர். ஆனால் அதையும் மீறி சென்ற அவர்கள் தங்கள் ஆடைகளை கழற்றி ஆவேசத்துடன் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். ஒரு திருநங்கை அங்கு மெட்ரோ பணி நடக்கும் இடத்திலிருந்து ஒரு பெரிய கல்லை தூக்கி கொண்டு ஓடி வந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

இணை கமிஷனர்கள் அன்பு, மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சமாதான பேச்சு நடத்தினர்.