சிங்கள – முஸ்லிம் மக்களிடையே மோதலை ஏற்படுத்த சதி! ஜனாதிபதி தகவல்

இலங்கையில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கு பல்வேறு குழுக்கள் முயற்சிப்பதாகவும், அது குறித்து பொது மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிங்களம் முஸ்லிம் மக்களுக்கு இடையில் ஐக்கியத்தைக் குலைத்து பொது மக்கள் இடையில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கான சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் மறைந்து ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று மாலை கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாரிய ஊழல் மோசடிக்காரர்களுக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்கு விசேட நீதிமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் என இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட பேராசிரியர் சர்த் விஜேசூரிய கூறியதாகவும், இது தொடர்பில் பல மாதங்களாக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சில சட்ட ரீதியான நிலைமைகளுடன் அதனை எவ்வாறு மேற்கொள்வது, நிறுவனங்களை உருவாக்குதல், அதற்கான நபர்களை நியமித்தல், போன்றவற்றை சரிப்படுத்தி கலந்துரையாடல் மேற்கொண்டு செயற்படுவது அவசியம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.