புத்தர் சிலைகளை காப்பாற்ற அமைச்சுப் பதவியையும் இழக்கத் தயாராகும் அமைச்சர்!

அம்பாறை, இறக்காமம் தமிழர் பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையைப் பாதுகாப்பதற்காக அமைச்சுப் பதவியை இழக்கவும் தயாராக இருப்பதாக அமைச்சர் தயா கமகே சூளுரைத்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேசத்தில் உள்ள மாணிக்க மடுவின் மாயக்கல்லி மலையில் அண்மையில் புத்தர் சிலையொன்று பலவந்தமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.

குறித்த சிலை வைப்பு விவகாரத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து எதிர்க்குரல் கொடுத்து வரும் நிலையில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்திலும் இப்பிரச்சினை எதிரொலித்தது.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சிலை வைப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்மாந்துறை மன்சூர் காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

எனினும் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட சிலையை அகற்றுவது தொடர்பில் அமைச்சர் தயா கமகே கடுமையான முறையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

”இது சிங்கள பௌத்த நாடு. எங்கு வேண்டுமானாலும் நாங்கள் புத்தர் சிலை வைப்போம். அதனை யாரும் தடுக்க முடியாது.

பௌத்த மதம் அரசாங்க மதம். அதனை அனைவரும் ஏற்று நடக்க வேண்டும். இறக்காமத்தில் வைக்கப்பட்ட சிலையை அகற்ற முயற்சித்தால் அமைச்சுப் பதவியை துறந்து புத்தர் சிலையை பாதுகாக்கும் போராட்டத்தை முன்னெடுப்பேன்” என்றும் அமைச்சர் தயா கமகே இனவாதம் கக்கியுள்ளார்.

இவ்வளவுக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் கணிசமான தமிழ், முஸ்லிம் வாக்குகள் தயா கமகேவுக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே குறித்த சிலை வைப்பு விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கலந்துரையாடியபோது, ஒரு வார காலத்தினுள் இதற்கான தீர்வைப் பெற்றுத் தருவதாக பிரதமர் உறுதியளித்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.