குற்றவாளிக்கு அருள் செய்த புத்தர்

பாவங்களை மட்டுமே செய்து வந்த கொலைகாரன் அவன். குற்றமும், அதற்கான தண்டனையுமாக கழிந்து கொண்டிருந்த, அந்த வாழ்க்கையில் இருந்து வெளியே வர எண்ணினான். அவனுக்கு புத்தரை சந்திக்க வேண்டும் என்று ஆசை. அவரது மடாலயத்திற்கு எப்படிச் செல்வது? என்று தெரியாமல், மதில் சுவர் ஏறிக் குதித்து உள்ளே சென்ற போது, அங்கிருந்த சீடர்களிடம் மாட்டிக்கொண்டான்.

அவன் ஒரு கொலைகாரன் என்பதை அனைவரும் அறிந்திருந்தனர். அவர்களிடம், ‘நான் திருடுவதற்காக வரவில்லை. புத்தரை பார்ப்பதற்காகவே வந்தேன். நான் சன்னியாசி ஆக வேண்டும்’ என்றான்.

ஆனால் அவனது வார்த்தையை புத்தரின் பிரதான சீடராக இருந்த சாரிபுத்தன் நம்பவில்லை. கோபத்தில் ‘இவனை இங்கிருந்து துரத்துங்கள்’ என்று கட்டளையிட்டான்.

சாரிபுத்தன் அப்படிச் சொன்னது அவனுக்கு கோபத்தை வரவழைக்கவில்லை. ஆனால் மனம் உடைந்து போனான். ‘புத்தரை நெருங்கக் கூட முடியாத அளவுக்கு நான் பாவியாக இருக்கிறேனே’ என்று உள்ளம் நொந்தவன், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தான். அதையும் புத்தரின் புனித இடத்திலேயே செய்ய உறுதிகொண்டான்.

மடாலயத்தின் மதில் சுவருக்கு வந்தவன், தன்னுடைய தலையை அதில் பலமாக மோதினான். தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த நேரம் பார்த்து பிட்சைக்குச் சென்றிருந்த புத்தர் மடாலயம் திரும்பினார்.

அப்போது ஒருவன் சுவரில் தலையை முட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து பதறிப்போய், அவனைத் தடுத்து நிறுத்தினார். பின்னர் ‘என்ன நடந்தது?’ என்று விசாரித்தார். அவன் அனைத்தையும் சொல்லி முடித்ததும், அவனை சாரிபுத்தனிடம் அழைத்துச் சென்ற புத்தர், ‘எதற்காக இவனை விரட்டினாய்?’ என்று கேட்டார்.

சாரிபுத்தனோ, ‘இவன் திருந்த முடியாதவன்’ என்றான்.

‘இல்லை.. உன் கணிப்பு தவறானது. இவனை விரைவில் திருத்திவிட முடியும். இவனும் துறவுக்குத் தகுதியானவனாக மாறுவான்’ என்றார்.

புத்தரின் வார்த்தையைக் கேட்டதும், அந்த கொலைகாரனின் மனம் ஆனந்தம் அடைந்தது. புத்தரின் கருணை அவனை வியப்படையச் செய்தது. ஒரே வாரத்தில் அமைதியும், சாந்தமும் தவழும் ஒப்பற்ற மனிதனாக அவன் மாறியிருந்தான். சன்னியாசம் ஏற்கும் தகுதியை அடைந்தான்.

அவனது இந்த மாற்றத்தைக் கண்டு சீடர்கள் அனைவருக்கும் ஆச்சரியம். ‘இது எப்படி சாத்தியம்?’ என்று கேட்டான் சாரிபுத்தன்.

புத்தர் மெல்லிய புன்னகையுடன்.. ‘சாரிபுத்தா! நீ நல்லவன். ஆனால் உனக்கு ஞானம் இல்லை. பாவங்களின் சுமை என்ன என்பதை நீ அறியவில்லை. அதன் தவிப்பை நீ உணர்ந்திருக்கவில்லை. அதனால் உன்னால் அவனுடைய எண்ணத்தை புரிந்து கொள்ள முடியாது. நீ அவனது கடந்த காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டாய். இறந்த காலம் என்பது இறந்து போன காலமே. அதனால் என்ன பயன்? எதிர்காலத்தை எண்ணிப்பார்க்க வேண்டும். அதை நிகழ்காலத்தில் உருவாக்க வேண்டும். தன் பாவச் சுமையான இறந்த காலத்தில் இருந்து விடுபட வேண்டும் என்ற தவிப்புதான், அவனுக்கு இப்போது விடுதலையை தேடித் தந்திருக்கிறது’ என்றார்.