எடையை குறைக்க தீவிர சிகிச்சை: நபருக்கு நேர்ந்த விபரீதம்

எடையை குறைக்க தீவிரமான சிகிச்சை மேற்கொண்ட நபருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், ரூ.78.000 நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த மோகன் என்பவர் உடல் எடையை குறைப்பதற்காக அண்ணாநகரில் உள்ள கோலார்ஸ் ஹெல்த்கேர் மையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு உடல் எடையை குறைப்பதற்காக இவரிடம் ரூ.33 ஆயிரம் கேட்டுள்ளனர். அதற்கு சம்மதித்து தவணை முறையில் ரூ.23 ஆயிரம் கொடுத்துள்ளார்.

அதன்பின்னர் அவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. சூடான கோட்டை அணியும் சிகிச்சையும், அதன் பிறகு மசாஜ் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

இந்த தீவிர சிகிச்சையால் மோகனின் அடிவயிறு மற்றும் சிறுநீர் குழாய் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மோகன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், மோசமான சிகிச்சையின் காரணமாக எனது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடல்நலத்தை கருத்தில் கொண்டு நஷ்டஈடு வழங்கவேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மனு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தலைவர் கே.ஜெயபாலன், உறுப்பினர் டி.கலையரசி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த குறைதீர் மன்றம், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் மனுதாரர் கட்டிய சிகிச்சை தொகை ரூ.23 ஆயிரம், வழக்கு செலவாக ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.78 ஆயிரம் நஷ்டஈடாக அளிக்குமாறு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.