வித்யா படுகொலையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிக்கு அவுஸ்திரேலியா கொடுத்த அதிர்ச்சி!

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவுக்கு அவுஸ்திரேலியாவுக்கு விசா வழங்குவதனை இலங்கையின் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா படுகொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பிரதான சந்தேகநபரை விடுவிக்குமாறு பொலிஸாருக்கு ஆலாசனை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் விசா கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் தனது மகளின் பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொள்வதற்கு என கூறி சிரேஷ் பிரதி பொலிஸ்மா அதிபர் விசா விண்ணப்பித்துள்ளார்.

எனினும் அவருக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டு மற்றும் விரைவில் அவர் கைது செய்யப்படவுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் காரணமாக இலங்கை அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் அலுவலத்தினால் விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

17 வயதுடைய மாணவி வித்யா 2015 மே மாதம் 13ஆம் திகதி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டு கொலை செய்யப்பட்டார்.

அதன் பிரதான சந்தேகநபரான மஹாலிங்கம் சசிக்குமார் எனப்படும் சுவிஸ் குமார் என்பவர் பிரதேச மக்களினால் பிடிக்கப்பட்டு மரத்தில் கட்டி வைக்கப்பட்ட போதிலும், அப்போதைய யாழ் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட லலித் ஜயசிங்கவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் குழுவொன்றினால் அவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

பின்னர் கிளிநொச்சி வரை பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இரகசியமாக அழைத்து வரப்பட்டு கொழும்பிற்கு தப்பி செல்ல சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

இதனால் கடுமையான கோபமடைந்த பிரதேச மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டமையினால் மீண்டும் சுவிஸ் குமார் வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.