யாழ்ப்பாணத்தில் மறைமுகமான யுத்தம் ஒன்றை எதிர்கொள்கின்றோம்-விக்னேஸ்வரன்

தற்போது நேரடியான யுத்தம் ஒன்று இல்லாவிட்டாலும், மறைமுகமான யுத்தம் ஒன்றை, ஒடுக்குமுறை ஒன்றை நாம் எதிர்கொள்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாழ் நாள் சாதனையாளர் விருதுபெற்ற ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கத்தின் பாராட்டு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு காலத்தில் எதனையும் தர அரசாங்கம் தயாராக இருக்கவில்லை. இப்போதும் அதேபோன்ற ஒரு நிலைதான் காணப்படுகின்றது. எல்லாம் திறந்துவிடப்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டாலுங் கூட, மறைமுகமான அழுத்தங்களும் ஒடுக்குமுறைகளும் தொடரத்தான் செய்கின்றன. இன்றைய காலகட்டத்தில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது.

ஓரு இலட்சத்துக்கும் அதிகமான படையினரை வடபகுதியில் வைத் துக்கொண்டு மக்கள் எவ்வாறு சுதந்திரமாக நடமாட முடியும்? எப்படித் தொழில் செய்ய முடியும்? இது போன்ற பல்வேறு நெருக்கடிகள் எம் மத்தியில் நேரடியாகவும் மறைமுகமாகவும் திணிக்கப்பட்டுள்ளன.

5 இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தமிழ் மக்களுடைய குரலாக அவை ஒலித்திருக்கின்றன.

இதற்காக அந்தப் பத்திரிகை நிறுவனங்கள் சந்தித்த நெருக்கடிகள் பல யாழ்ப்பாண குடையிற்ச்சுவாமிகள் சில தசாப்தங்களுக்கு முன்னர் சொன்னார்.

எரிப்பார்கள், ஏசுவார்கள். உண்மையை எழுதுங்கள் உண்மையாக எழுதுங்கள் என அவரது தீர்க்கதரிசனம் உண்மையாகவே இருந்தது.

அடக்குமுறைகளுக்கு மத்தியிலும், தமிழ்ப் பத்திரிகைகள் தமது பத்திரிகை தர்மத்தைக்கைவிடவில்லை. தாம் சார்ந்த மக்களின் குரலாகவே அவை எப்போதும் ஒலித்தன.

அதற்காகக் கொடுக்கப்பட்ட விலையும் அதிகம்தான். போரின் போதான தன்னுடைய காலத்தில் திரு.தனபாலசிங்கம் அவர்களும் தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கத் தவறவில்லை.

ஊடகவியலாளர் நிமலராஜின் 16 ஆவது ஆண்டு நினைவுதினம் கடந்த மாதம் நினைவுகூரப்பட்டது.

நிமலராஜனில் ஆரம்பமாகி இந்த 16 வருட காலத்தில் சுமார் 40 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் இலங்கை முழுவதிலும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் அல்லது காணாமற்போயிருக்கின்றார்கள் எனக் கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.

இதில் 3 பேரைத் தவிர்ந்த ஏனைய அனைவருமே தமிழர்கள் இவ்வாறு கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் விசாரணைகள் எதுவும் முன்னைய ஆட்சியில் நடத்தப்பட்டு, குற்றவாளிகள் நீதியின் முன்பாக நிறுத்தப்படவில்லை. அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்ற நம்பிக்கையும் அப்போது இருக்கவுமில்லை. கடந்த (2015) ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது, ஊடகவியலாளர்கள் கொலைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. ஆனால், இரண்டு சிங்கள ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பான விசாரணைகளை மாத்திரம் புதிய அரசாங்கம் மீள் விசாரணைக்கு எடுத்துள்ளது.

தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பில் எந்தவிதமான விசாரணையும் இல்லை என்ற நிலைதான் தொடர்கின்றது. இது தொடர்பில் தமிழ் ஊடகத்துறை சார்ந்தவர்கள் அரசாங்கத்திடம் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

கடந்த மார்ச் இறுதிப் பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவுடன் நடத்திய பேச்சுக்களின் போதும் இது தொடர்பில் அவரிடம் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.

கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் சட்டத்தின் முன்பாக 6 நிறுத்தப்பட்டு, பலியான ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்தியிருந்தேன்

ஆனால் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமலிருப்பதையிட்டு என்னுடைய அதிருப்தியை இந்த இடத்தில் நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஒரு நீதி சிங்கள ஊடகவியலாளர்களுக்கு இன்னொரு நீதி என்ற நிலை தொடர்ந்தால் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் எவ்வாறு கட்டியெழுப்ப முடியும்? தமிழர்களின் நியாயமான அபிலாசைகளுக்காக குரல் கொடுக்கும் போது எம்மை தீவிரவாதிகள் அல்லது கடும் போக்காளர்கள் என முத்திரை குத்துகின்றார்கள்.

இவ்வாறான ஒரு போக்கை அண்மைக்காலத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு முத்திரை குத்துவது, மரணபயம் ஏற்படுத்துவது போன்றவை எமது வாய்களை அடைக்கச் செய்வதற்காகவா என்ற சந்தேகந்தான் இப்போது எனக்கு ஏற்படுகின்றது.

இவற்றின் பின்னணியில் ஒரு அரசியல் நோக்கம் இருப்பதாகவே நான் சந்தேகிக்கின்றேன். எமது வாய்களை அடைத்துவிட்டால், தாம் விரும்பும் ஒரு தீர்வைக்கொண்டுவர முடியும் என அரசாங்கத் தரப்பினர் சிந்திக்கலாம். மாகாணசபைத் தேர்தலின் போது மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாம் எதனைச் சொல்லி வாக்குக் கேட்டோமோ அதனைத்தான் இப்போதும் கேட்கின்றோம். மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதியிலிருந்து அல்லது மக்கள் எமக்குக் கொடுத்த ஆணையிலிருந்து நாம் பின்வாங்க முடியாது.

மேலும் அரசியலமைப்புப் பேரவையில் இடம்பெறும் நகர்வுகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பனவையாக அமையவில்லை. பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பதா இல்லையா என்பதிலேயே தெளிவற்ற நிலைதான் உள்ளது. சிறுபான்மையினரை இரண்டாந் தரப்பிரஜைகளாகத்தான் பிரதான கட்சிகள் மதிக்கின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதில் பல தடைகளைத் தாண்டிச்செல்லவேண்டிய தேவையும் உள்ளது.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. அதற்கடுத்ததாக சர்வஜன வாக்கெடுப்பு என்ற தடையும் உள்ளது. இவை அனைத்தையும் தாண்டி நியாயமான ஒரு தீர்வு கிடைத்தால் நாம் அதனை நிச்சயமாக வரவேற்போம்.

ஆனால் அதற்கான சூழ்நிலைகள் இருக்கின்றனவா? அதனை நாம் எவ்வாறு உருவாக்கப்போகின்றோம்? வெறுமனே மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துக்கொண்டிருப்பதால் என்ன பலன்? எனவே எமது நிலை கவலைக்கிடமாக இருக்கும் நேரம் இது. ஆரோக்கியமான, துணிச்சலான ஆனால் சூட்சுமமான பங்களிப்பை வழங்க இன்றைய பத்திரிகையாளர்கள், திரு.தனபாலசிங்கத்திடம் இருந்து பலதையும் கற்க இருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.