ஆலங்குளம் அருகே ரூ.2 லட்சத்துக்கு ஆண் குழந்தை விற்பனை பெண்கள் உள்பட 7 பேர் கைது

ஆலங்குளம் அருகே ரூ.2½ லட்சத்துக்கு ஆண் குழந்தை விற்பனை செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆண் குழந்தை ரூ.2½ லட்சம்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழப்பாவூர் நேரு நகரை சேர்ந்த தங்கையா மகன் அருணாசலம்(வயது 35). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி தேவிகா(33). இவர்களுக்கு திருமணமாகி 13 வருடங்களாகியும் குழந்தை இல்லை. எனவே இவர்கள் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்க முடிவு செய்தனர். இதனையடுத்து தங்களது உறவினரான கீழப்பாவூரை சேர்ந்த நயினாரை(47) சந்தித்து தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

அதனை கேட்ட நயினார், தான் ஒரு ஆண் குழந்தையை தத்து எடுக்க ஏற்பாடு செய்து தருவதாகவும், அதற்கு ரூ.2½ லட்சம் செலவாகும் என்றும், பணத்தை கொடுத்தால் சட்டப்பூர்வமான ஆவணங்களுடன் குழந்தையை தத்து எடுத்து தருவதாகவும் கூறினார்.

இதனையடுத்து அருணாசலம் ரூ.2½ லட்சம் பணத்தை நயினாரிடம் கொடுத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து பிறந்து ஒரு நாளே ஆன ஒரு ஆண் குழந்தையை அருணாசலத்திடம், நயினார் கடந்த மாதம் 8-ந் தேதி கொடுத்துள்ளார்.

உரிய ஆவணங்கள்…

இதனைத்தொடர்ந்து அந்த குழந்தையை தத்து எடுத்ததற்கான முறையான ஆவணங்களை தருமாறு அருணாசலம், நயினாரிடம் கேட்டார். ஆனால் உரிய ஆவணங்களை தராமல் நயினார் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று அருணாசலம், ஆவணங்களை தருமாறு நயினாரிடம் கேட்டபோது இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் நயினார், முறையான ஆவணங்களை தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அருணாசலம், இதுகுறித்து ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து நயினாரை பிடித்து விசாரணை நடத்தினார்.

ஆண் குழந்தை கடத்தல்

போலீசாரின் தீவிர விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அருணாசலம், தங்களுக்கு குழந்தை இல்லை என்றதும் தனது உறவினரான நயினாரிடம் ஒரு குழந்தையை தத்து எடுத்து தருமாறு கேட்டுள்ளார். அதன்படி நயினார் தனது நண்பர் ஆறுமுகத்திடம் இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.

பின்னர் இருவரும் சேர்ந்து தங்கபாண்டியனிடம் இது தொடர்பாக பேசியுள்ளனர்.

அப்போது தங்கபாண்டியன், இந்த குழந்தை விவகாரம் தொடர்பாக புரோக்கர்களான பொன்னுத்தாய் மற்றும் எஸ்தர் ஆகியோரை சந்தித்து அவர்களது உதவியை நாடியுள்ளார். இதனையடுத்து எஸ்தர், கடையநல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தவறான உறவு மூலம் கடந்த மாதம் 7-ந் தேதி பிறந்த ஒரு ஆண் குழந்தையை அந்த பெண்ணிடம் விலைபேசி வாங்கி கொண்டு வந்து தங்கபாண்டியனிடம் கொடுத்து உள்ளார். அதை தங்கபாண்டியன், நயினாரிடம் கொடுத்துள்ளார். நயினார், அந்த குழந்தையை தத்து எடுத்து கொண்டு வந்ததுபோல் அருணாசலம் தம்பதியினரிடம் ஒப்படைத்துள்ளார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பெண்கள் உள்பட 7 பேர் கைது

இந்த குழந்தை கடத்தலில் நயினார், ஆலங்குளம் ஆர்சி சர்ச் தெருவை சேர்ந்த ஆறுமுகம்(55), சிவநாடானூரை சேர்ந்த தங்கபாண்டியன் (57), மேலபட்டமுடையார்புரத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(47), கீழப்பாவூரை சேர்ந்த சேர்மன்(49), சாம்பவர் வடகரையை சேர்ந்த பொன்னுத்தாய்(67), கடையநல்லூரை சேர்ந்த எஸ்தர்(47) ஆகிய 7 பேருக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார், 2 பெண்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.

மேலும் அந்த குழந்தையை மீட்டு ஆலங்குளத்தில் உள்ள விடியல் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

ரூ.2½ லட்சத்துக்கு ஆண் குழந்தை கடத்தி விற்கப்பட்ட சம்பவம் ஆலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.