முன்னாள் போராளி விமான நிலையத்தில் வைத்து அதிரடி கைது..! இளம் பெண் முறைப்பாடு

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான தனது கணவன் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை தமது குடும்பத்தை வெகுவாக பாதித்துள்ளதாக கைது செய்யப்பட்டவரின் மனைவி எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனிடம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிந்தார். இதன் போது குறித்த விடயம் எதிர்க்கட்சி தலைவரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் அந்த பெண் மேலும் தெரிவித்துள்ளதாவது, 31 வயதான நடராசா சபேஸ்வரன் என்ற தனது கணவன் இந்தியாவுக்கு திருமண நிகழ்வொன்றிற்கு சென்றிருந்த நிலையில் அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் கடந்த மாதம் 23ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விமான நிலையத்தில் வைத்து தனது கணவன் கைது செய்யப்பட்டதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது கணவன், கடந்த 2010ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குற்றங்களை ஒப்புக்கொண்ட நிலையில், குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் தனது கணவன் கைது செய்யப்பட்டமையானது குடும்பத்தினரை வெகுவாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையில் தனது கணவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விடயங்களை தம்மிடம் தெரிவிக்க முடியாத நிலையில் தனது கணவன் இருப்பதாக குறித்த பெண் மேலும் தெரிவித்துள்ளார்.