தன் குடும்பத்து வாரிசை பெற்றெடுத்ததற்கும், தனக்கு பேத்தியை பெற்றுகொடுத்ததற்கும் மருமகளுக்கு கார் பரிசு வழங்கி சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஒரு மாமியார்.
உத்தரபிரதேச மாநிலம், ஹமீர் பூரை சேர்ந்த பிரேமா தேவி, சுகாதாரத்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது மருமகள் குஷ்புவை மகளாக பாவித்து வந்தார். குஷ்பு பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மிகவும் பரபரப்பாக இருந்த பிரேமா தனக்கு பேத்தி பிறந்த செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.
தனக்கு பேத்தி பிறந்த சந்தோஷத்தை கொண்டாடுவதற்காக, வீட்டில் ஒரு சிறிய விருந்துக்கு ஏற்பாடு செய்தார் பிரேமா. இந்த விருந்தின் போது அனைவரும் வியக்கும் வகையில், தனக்கு குடும்பத்திற்கு பெண் வாரிசை அதாவது பேத்தியை பெற்றெடுத்த மருமகளுக்கும், பேத்திக்கும் சேர்த்து ஹோண்டா சிட்டி காரை பரிசாக வழங்கி மகிழ்ச்சியடைந்தார்.
பெண்களுக்கு சமுகத்தில் பல்வேறு பிரச்சனைகள் அதிகரித்துள்ள நிலையில், பெண் குழந்தையை பெற்றதால், மாமியார் மருமகளை கவுரவிக்கும் விதமாக கார் பரிசு வழங்கி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சம்பவம் அனைவரிடமும் பாராட்டை பெற்றுள்ளது.