இராணுவமும் ஆவா குழுவும்!

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைக் குறைக்க வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் தடையாக உள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது.

ஆயினும், இராணுவத்தைக் குறைப்பதற்கும், இராணுவத்தின் பிடியில் உள்ள பொதுமக்களின் காணிகளைக் கைவிடுவதற்கும் முன்னைய அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை. வடக்கில் இருந்து இராணுவம் குறைக்கப்படமாட்டாது. இராணுவத்தினர் தேசிய பாதுகாப்புக்காகவே வடக்கில் நிலைநிறுத்தப்ட்டிருக்கின்றார்கள்.

ஆகவே, அவர்கள் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படமாட்டாது என்று அந்த அரசாங்கம் பிடிவாதமானதொரு போக்கைக் கடைப்பிடித்து வந்தது.

ஆட்சி மாறியுள்ள போதிலும், நல்லாட்சி அரசாங்கமும் முன்னைய அரசாங்கத்தின் போக்கிலேயே சென்று கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இராணுவத்தைக் குறைப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை.

அதேபோன்று, யாழ் மாவட்டத்தில் வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு, மன்னாரில் முள்ளிக்குளம் போன்று பாரிய அளவிலான காணிகளைக் கைப்பற்றி நிலைகொண்டுள்ள இராணுவம் அந்தக் காணிகளைக் கைவிடுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.

அவ்வப்போது ஒரு சில ஏக்கர் காணிகளை யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மீள்குடியேற்றத்திற்காகப் பொதுமக்களிடம் ஒப்படைப்பதாக அரசாங்கம் அறிவித்தாலும்கூட,  இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்களை முழுமையாகவும், உளப்பூர்வமாகவும் உணர்ந்து அதற்கேற்ற வகையில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரியவில்லை.

இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்காகக் கையளிக்கும் நடவடிக்கைகள் முழுக்க முழுக்க அரசியல் நோக்கம் கொண்டதாகவே மேற்கொள்ளப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களின் நன்மையைக் கருத்திற்கொண்டு முன்னெடுக்கப்படுகின்ற செயற்பாடாகத் தெரியவில்லை.

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் அவலம் மிகுந்த நிலையில் உள்ள மக்களை ஆறுமாத காலத்தில் மீள்குடியேற்றுவதாக ஜனாதிபதி அவர்களுடைய குடிசைகளில் சென்று சந்தித்துப் பேசிய போது உறுதியளித்திருந்தார். ஆனால் அந்த உறுதி மொழி உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை.

வலிகாமம் பிரதேசத்தில் இராணுவத்தினர் பிடித்து வைத்துள்ள காணிகளை விடுவிப்பதற்கு மனமில்லாத ஒரு போக்கிலேயே அவ்வப்போது காணிகள் சில்லறை சில்லறையாக விடுவிக்கப்படுகின்றன. இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கும் நடவடிக்கையில் அரசாங்கமும், இராணுவமும் மறைமுகமான ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றன என்பதை இந்த நடவடிக்கை தெளிவாக உணர்த்துகின்றது.

அதேநேரத்தில் கேப்பாப்பிலவு, முள்ளிக்குளம் போன்ற பிரதேசங்களில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கமும் இராணுவமும், கடற்படையும் விருப்பமில்லாதிருப்பதையே காண முடிகின்றது.

இங்கு பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. பல்வேறு வழிகளிலும் செயற்பாடுகளின் ஊடாகவும், அந்தக் காணிகள் விடுவிக்கப்படமாட்டாது என்பதைத் தெளிவாக வெளிப்படுத்தி அவை செயற்பட்டு வருகின்றன.

அமைதியைக் குலைத்துள்ள செயற்பாடுகள்

இது ஒரு புறமிருக்க, யாழ்ப்பாணத்தில் ஆவா என்ற பெயரிலான குழுவினர் செயற்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்களும், ஆவா குழுவின் உருவாக்கம் பற்றிய செய்திகளும் இராணுவம் வடக்கில் தொடர்ந்து நிலைகொண்டிருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலேயே அமைந்திருக்கின்றன.

ஆவா குழுவினர் இராணுவத்தினால் உருவாக்கப்பட்ட வாள்களை ஆயுதமாகக் கொண்ட ஆயுதக் குழுவாகச் செயற்பட்டு வந்துள்ளது.

கடந்த காலங்களில் இவர்களின் செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தைப் பெரும் அச்சத்தில் முழ்கச் செய்திருந்தன. அச்சுறுத்தல்கள், கொள்ளைகள் காரணமாக யாழ்ப்பாணத்து மக்கள் பெரும் அச்சமடைந்திருந்தனர். பல்வேறு இழப்புக்களுக்கும் ஆளாகியிருந்தனர்.

பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தி வைத்திருப்பதன் மூலம், அரசாங்கத்தின் நடவடிக்கைகள், இராணுவத்தின் செயற்பாடுகள் என்பவற்றில் இருந்து அவர்களுடைய கவனத்தைத் இந்தக் குழுவினர் முழுமையாகத் திசை திருப்பியிருந்தனர்.

தற்போது ஆவா குழு தொடர்பில் எழுந்துள்ள – உருவாக்கப்பட்டுள்ள பரபரப்பான சூழ்நிலையானது, தமிழ் மக்களினதும், நாட்டினதும் எதிர்காலத் தலைவிதியை நிர்ணயிக்கின்ற செயற்பாடுகளில் யாழ்ப்பாணத்து மக்களையும் புத்திஜீவிகளையும், ஏன் – அரசியல்வாதிகளையும்கூட கவனம் செலுத்த முடியாத அவதானம் செலுத்த முடியாத நிலைமைக்கு ஆளாக்கியிருக்கின்றது.

நாட்டில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செய்றபாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மும்முனைச் செயற்பாட்டைக் கொண்டுள்ள இந்த அரசிலயமைப்பு உருவாக்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

மறபக்கத்தில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்பு கூறுவதற்கான பொறிமுறைகளை உருவாக்கும் நடவடிக்கைகளும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவற்றுக்கிடையே, வற் வரி அதிகரிப்பு என்ற பொதுமக்களை பெரிய அளவில் பொருளாதார ரீதியாக பாதிக்கின்ற செயற்பாட்டையும் அரசாங்கம் முன்னெடுத்திருக்கின்றது.

அத்துடன் அதிமுக்கிய செயற்பாடாகிய வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

வற் வரியை சாதாரண மக்களையும் நடுத்தர வகுப்பினரையும் பெரிய அளவில் பாதிக்கத்தக்க வகையில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றது,

இது குறித்து தென்பகுதியில் பொதுமக்கள் மற்றும் ஏனைய தரப்புக்களில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது. அது குறித்து உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

தேசிய மட்டத்தில் இடம்பெறுகின்ற இந்த வரிவிதிப்புச் செயற்பாடு குறித்து வடக்கு கிழக்குப் பிரதேச மக்கள் தரப்பில் உரிய கவனம் செலுத்துவதற்குக் குந்தகமாகவே பதட்டத்தையம், பயப்பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நள்ளிரவில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவமானது. வடமாகாணத்தை முழுமையாகத் தன்வசப்படுத்தியிருந்தது.

பலரும் உணர்ச்சி வசப்பட்டவர்களாக மாணவர்கள் கொல்லப்பட்மைக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்திச் செயற்பட்டிருந்தனர். வேறு விடயங்கள் குறித்து எவரும் சிந்திக்கத்தக்க மனநிலையில் இல்லாதது போன்றதொரு தோற்றமே அப்போது வெளிப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து இடம்பெற்ற சிவிலுடையில் கடமையில் ஈடுபட்டிருந்த தேசிய புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிசார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவமும்,

அதற்கு உரிமை கோரும் வகையில் வெளியிடப்பட்டிருந்த துண்டு பிரசுரமும், அதனைத் தொடர்ந்து பிரபாகரன் படை என்ற பெயரில் வெளியிடப்பட்டிருந்த மற்றுமொரு துண்டுப் பிரசுரமும் ஆவா என்ற வாள்வெட்டுக் குழு போன்ற சமூகத்தை அச்சத்தில் ஆழ்த்துகின்ற குழுக்களின் பால் கவனத்தை ஈர்த்திருந்தன.

மாணவர்களின் மரணங்கள் வடமாகாணத்தில் மட்டுமல்லாமல் தேசிய மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததைப் போலவே, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற ஆவா குழுவின் செயற்பாடுகளும் நாடளாவிய ரீதியில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

அம்பலமாகியுள்ள ஆவா குழு

இராணுவமே ஆவா குழுவின் பிதா மகர் என்பது அதிகாரபூர்வமாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

அமைச்சரவைப் பேச்சாளராகிய அமைச்சர் ராஜித சேனாரத்ன முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகிய கோட்டாபயவே ஆவா குழுவை உருவாக்கியிருந்தார் என்று நேரடியாகவும் பகிரங்கமாகவும் அறிவித்திருக்கின்றார்.

இந்தக் குற்றச்சாட்டை கோட்டாபய மறுத்துரைத்திருக்கின்ற போதிலும், இராணுவத்தின் கைக்கூலியாக – கையாளாகவே ஆவா குழு போன்ற குழுக்கள் செயற்பட்டிருந்தன என்று பொதுமக்கள் மத்தியில் நிலவிய சந்தேகம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கின்றது.

வடமாகாணத்தின் அமைதியைக் குலைத்து, அங்குள்ள மக்களை பயப்பீதியிலும், ஒரு கொதி நிலையிலும் வைத்திருப்பதற்கான ஓர் உத்தியாகவே சமூகக்குற்றச் செயல்களும், சமூகத்தைச் சீரழிக்கின்ற சமூகவிரோதச் செயற்பாடுகளும் இத்தகைய குழுக்களின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனவே, தொட்டிலையும் ஆட்டி, குழந்தையைக் கிள்ளிவிடுகின்ற கைங்கரியம் சாதுரியமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவே எண்ண வேண்டியுள்ளது.

அளவுக்கு அதிகமாகவே இராணுவத்தினரும் பொலிசாரும் தேசிய பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று கருதப்பட்ட வடபகுதியில் காலத்துக்குக் காலம் தீவிரமாகச் செயற்பட்டிருந்த இந்த சமூக விரோதக் குழுக்கள் அடக்கியொடுக்கப்படவில்லை. அவர்களை நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்ற கசப்பான உண்மையையும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.

தற்போது வடபகுதியில் வெளிப்பட்டுள்ள ஆவா குழுவினருடைய செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுமா என்ற கேள்வி பாதிக்கப்பட்டுள்ள வடபகுதி மக்களால் மட்டுமல்ல தென்பகுதியில் உள்ளவர்களினாலும் மிகுந்த ஆர்வத்துடன் கேட்கப்படுகின்றது.

கடந்த காலத்தில் ஆவா குழுவினருடைய செயற்பாடுகளுக்குக் காரணமாக இருந்தவர்கள் யார் என்பது ஒரு புறமிருக்க, இப்போது அதனைச் செயற்படுத்தி வருபவர் யார், என்ன காரணத்திற்காக ஆவா குழுவினர் இயங்குநிiiயில் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது போன்ற கேள்விகள் இப்போது முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆவா குழுவை உருவாக்கியவர் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்றும் யுத்த காலத்தில் இந்தக் குழுவுக்குப் பொறுப்பாக பிரிகேடியர் ஒருவரே செயற்பட்டிருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன அந்த பிரிகேடியர் யார், அவருடைய பெயர் என்ன என்பதையும் வெளிப்படுத்தியிருக்க வேண்டியது அவசியமாகும்.

ஏனெனில் நல்லாட்சி அரசாங்கம் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள இந்தச் சூழலில், அமைதியைக் குலைத்து மக்கள் மத்தியில் குழப்பகரமான ஒரு நிலைமையை உருவாக்குவதற்காக ஆவா குழுவினர் இப்போது செயற்படத் தொடங்கியிருக்கின்றனர் என்பதைக் காணக் கூடியதாக உள்ளது.

ஆவா குழு யுத்த காலத்தில் யாரால் உருவாக்கப்பட்டது, யாரால் நேரடியாகச் செயற்படுத்தப்பட்டது என்பதிலும் பார்க்க, இப்போது அந்தக் குழு யாரால் செயற்படுத்தப்படுகின்றது, நல்லாட்சி அரசாங்கத்தில் அத்தகைய குழுவொன்று எவ்வாறு பகிரங்கமாகச் செயற்பட முடிந்திருக்கின்றது என்பது குறித்து ஆராய்ந்து உண்மைகளைக் கண்டறிய வேண்டியது முக்கியமாகும்.

எதேச்சதிகார போக்கைக் கொண்டிருந்த ஓர் ஆட்சியை மாற்றியமைத்து, ஜனநாயகத்தை மேலோங்கச் செய்துள்ள நல்லாட்சி அரசாங்கம் முன்னைய ஆட்சியில் தமிழ் மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருப்பதற்காகக் கடைப்பிடிக்கப்பட்ட மறைமுக அச்சுறுத்தல் நடவடிக்கைகளைத் தொடரவிடுவது ஆரோக்கியமான செயற்பாடாக இருக்க முடியாது.

சட்டத்தையும் ஒழுங்கையும் முறையாக நிலைநாட்டுவதன் மூலம் மட்டுமே, நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லையேல் புதிய அரசாங்கமும் எதேச்சதிகாரப் போக்கையே கடைப்பிடித்து வருகி;ன்றது என்ற பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்.

வெளியில் வருவதற்கான முயற்சியா?

ஆவா குழுவினரின் செயற்பாடுகள் தலையெடுத்துள்ளதையடுத்து சட்டமும் ஒழுங்கும் யாழ்ப்பாணத்தில் சீர்குலைந்துள்ளதாகவே பலரும் கருதுகின்றனர்.

இந்தக் குழுவினரைக் கட்டுப்படுத்துவதிலும் அவர்களை இனங் கண்டு, அவர்களின் செயற்பாடுகளை முடக்கி, அந்தச் செயற்பாட்டாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கு பொலிசாரினால் முடியாமல் போயிருக்கின்றதோ என்ற சந்தேகமும் இப்போது பரவலாக எழுந்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள இப்போதைய நிலைமை குறித்து சாதாரண மக்கள் இவ்வாறு சந்தேகப்படுவது இயல்பு.

அரசியல்வாதிகளும் இவ்வாறான சந்தேகம் கிளப்பினால் அதுவும் சாதாரணமாகவே கருதப்படும். ஆனால் பொலிசாரினால் ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்த முடியாமல் போயிருப்பதாக இராணுவ தரப்பில் இருந்து குரல் எழுந்திருப்பதை வேடிக்கையானதாகவும் அநேரத்தில் உள்நோக்கம் கொண்டதொரு கருத்து வெளிப்பாடாகவும் கருத வேண்டியிருக்கின்றது.

அரசாங்கம் இராணுவத்திற்கு அனுமதியளிக்குமானால், இராணுவம் ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்தி யாழ்ப்பாணத்தில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்று யாழ் மாவட்ட இராணுவ தளபதி கூறியுள்ளார். பொறுப்புள்ள இராணுவ அதிகாரி ஒருவரின் கடமை சார்ந்த ஒரு கூற்றாக இதனைக் கருதலாம்.

அதேவேளை, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொறுப்பை ஏற்றுள்ள பொலிசாருக்கு, ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்தவும், அவர்களைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவும் இராணுவம் உறுதுணையாகச் செயற்படத் தயாராக இருக்கின்றது என்று அவர் கூறியிருப்பாரேயாகில் அது மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

பொலிசார் மீது நம்பிக்கையற்ற வகையிலும், ஆவா குழுவினரை அவர்களால் கட்டுப்படுத்த முடியாதது போலவும் தொனி செய்துள்ள இந்தக் கருத்தானது, இராணுவம் வெளியில் வந்து முந்திய அரசாங்கத்தில் இருந்தது போன்று, சிவில் நிர்வாகக் கடமைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதை வெளிப்படுத்துவதைப் போன்று அமைந்திருக்கின்றது.

இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்தால் தெற்கில் உள்ளவர்கள் பேசுகின்றார்கள். முகாம்களை விட்டு அவர்கள் வெளியில் வந்தால், வடக்கில் உள்ளவர்கள் குறை கூறுகின்றார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

மொத்தத்தில் இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்காமல் வெளியில் வரவே விரும்புகின்றது – முயற்சிக்கின்றது என்பதையே யாழ் இராணுவ தளபதியின் கூற்று வெளிப்படுத்தியிருப்பதாக சந்தேகிக்க வேண்டியிருக்கின்றது.

இராணுவம் வடக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே வடபகுதி மக்களினதும், அவர்களுடைய அரசியல் தலைமையினதும் விருப்பமாகவும் வேண்டுகோளாகவும், நீண்ட நாளைய நிறைவேற்றப்படாத கோரிக்கையாகவும் இருக்கின்றது.

இந்த நிலையில் ஆவா குழுவின் செயற்பாடுகளைக் காரணம் காட்டி, இராணுவம் சிவில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முயற்சிக்கின்றதா என்று சந்தேகப்படுவதைத் தவறாகக் கருத முடியாது.

இராணுவத்தினர் மட்டுமல்ல. ஜனாதிபதியும்கூட, வடக்கில் இராணுவம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது.

வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள சொந்தக் காணிகளற்ற குடும்பங்களுக்காக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கென ஒதுக்கப்பட்டிருந்த காணிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட நூறு வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஜனாதிபதி இதனைக் கோடி காட்டியிருக்கின்றார்.

வடபகுதி மக்களை வாயாரப் புகழ்ந்து, நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்த வடபகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் ஒரு லட்சம் வீடுகளை அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அந்த வீடுகளை இராணுவத்தினரும் தனியார் கம்பனிகளும் நிர்மாணிப்பார்கள் என்றும் கூறியிருந்தார்.

இதன் மூலம் தமக்கு வாக்களித்த தமிழ் மக்கள் விரும்புகின்ற – அவர்கள் முன்வைத்துள்ள – இராணுவத்தைக் குறைக்க வேண்டும் அல்லது வடக்கில் இருந்து நகர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அவர் பெரிதாகக் கருதவில்லை என்று கருத வேண்டியிருக்கின்றது.

அது மட்டுமல்லாமல், இறுதியாக இராணுவத்தினர் வசமுள்ள காணிகளில் 454 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக யாழ் அரசாங்க அதிபரிடம் ஜனாதிபதி பொறுப்பளித்துள்ள போதிலும், அந்தப் பகுதியில் உள்ள இரண்டு இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது. அவர்கள் அங்கு மீள்குடியேறுகின்ற மக்களுடன் சேர்ந்து நிலைகொண்டிருப்பார்கள் என்ற இராணுவ தர்பபில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே, இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும், இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் கோரிக்கை வெறும் கோரிக்கையாகவே இருக்கப் போகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.