காதலியை காரை ஏற்றிக் கொன்ற காதலன்! இதுதான் காரணமா?…

வேலூர் மாவட்டத்தில் காதலி திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காரை ஏற்றிக் கொன்ற காதலனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் வாலாஜா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 30 ஆம் திகதி இரவு இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

விசாரணை நடத்தியதில் குறித்த பெண், அத்திபட்டு கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவரது மகள் சாந்தி(25) என தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சாந்தியின் கைப்பேசி எண்ணை ஆய்வு செய்ததில் வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவர் சக்திவேல்குமாரின் மகன் நிலவுராஜன் (24) என்பவருடன் அதிகமாக தொடர்பில் இருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சரணடைந்த 2 பேரையும், வாலாஜா பொலிசில் ஒப்படைத்தார். இவரிடம் விசாரணை நடத்தியதில், சாந்தியும், நிலவுராஜனின் அத்தை மகனான ஜான் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.

இந்நிலையில் ஜானுக்கும், வேறொரு பெண்ணிற்கும் திருமணம் நடந்துள்ளது. இருந்த போதிலும், சாந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அப்போதைய கலெக்டரிடம் சாந்தி புகார் அளித்துள்ளார், புகார் மனு மீது விசாரணை நடத்திய பொலிஸ் அதிகாரிகள் ஜானுக்கு ஏற்கனவே திருமணம் ஆனதால் விலகி செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் நிலவுராஜன் ஜானுடன் சேர்த்து வைப்பதாககூறி சாந்தியுடன் அடிக்கடி போனில் பேசியுள்ளார். இதனால் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது, இந்த விவகாரம் தெரியவந்ததால் நிலவுராஜனுக்கு அவரது பெற்றோர் வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் சாந்தி தன்னை ஏமாற்றி விட்டதாக நிலவுராஜனிடம் கதறி அழுதுள்ளார். அப்பொழுது அவரை சமாதானம் செய்யும் விதமாக தனது அண்ணன் நித்தியானந்தம் என்பவருடன் நிலவுராஜன் காஞ்சீபுரத்திற்கு காரில் அழைத்து சென்றுள்ளார்.

பின்பு வீடு திரும்பும் போது, சாந்தி தன்னை திருமணம் செய்து கொள் என வலியுறுத்த இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே சாந்தி காரை விட்டு இறங்கி சாலையில் நடக்க ஆரம்பித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நிலவுராஜன் சாலையில் நடந்து சென்ற சாந்தி மீது காரை ஏற்றி கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்று காலை 2 பேரையும் வாலாஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸ் அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.