பூஜையறையில் இருக்கும் விளக்குகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டுமா?

வீடுகளில் பூஜையறையில் இருக்கும் விளக்குகளை தினமும் சுத்தம் செய்ய வேண்டுமா? அதேபோல், தினமும் திரி மாற்றவேண்டுமா?  என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. ஆனால் விளக்கை சுத்தம் தினமும் செய்யத்தான் வேண்டும். அது தங்க விளக்காக இருந்தாலும் வெள்ளி விளக்காக இருந்தாலும் துடைக்க வேண்டும்.

பித்தளையாக இருந்தால் தேய்த்தே ஆக வேண்டும். திரியையும் முந்தைய நாளின் மிச்சமாக விட்டுவிடாமல் தூக்கி எறியத்தான் வேண்டும். ஒரு நாளைக்கு எரியும் படியான திரியைத்தான் போட வேண்டும். போடுவது போடுகிறோம், ஒரேயடியாகப் போட்டு விடலாம் என்று முழ நீளத்துக்குப் போடக்கூடாது.

விளக்கு என்பது வெளிச்சம் சம்பந்தப்பட்ட சமாசாரம் இல்லை. அது மங்களகரமானது. கலாசாரம். வெறும் வெளிச்சத்தைக் காட்ட வேண்டுமானால் மின்விளக்கே போதுமே. விளக்கு எரிகிறது என்றால் அங்கே அக்னி பகவான் அமர்ந்திருக்கிறார் என்று பொருள். நேற்றைய கரியிலேயே இன்று அவரைக் கொண்டு போய் உட்கார வைப்பதா?

தினமும் திரி மாற்ற வேண்டும். விளக்கை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு சோம்பலாக இருந்தால் விளக்கே ஏற்றாதீர்கள். கடவுளை மனதில் நினைத்துக்கொண்டாலே போதும். பரமாத்மாவின் சொரூபமாக விளக்கை ஆராதனம் பண்ணிக்கொண்டிருக்கிறோம். அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும்.