இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஏற்பட்ட பெரும் சோகம்! உலகையே ஆட்டிப்படைக்கும் சம்பவம்

ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பியா கண்டங்களை முப்புறமும் கொண்டுள்ள மெடிட்ரேனியன் கடலில் இந்த ஆண்டு 4,220 அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையினை மிக அதிகமானதாக புலம் பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு குறிப்பிடுகின்றது.

2015ஆம் ஆண்டு மெடிட்ரேனியன் கடலில் 3,777 அகதிகள் அல்லது புலம் பெயர்ந்தவர்கள் உயிரிழந்திருக்கின்றனர்.

சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளில் தொடர்ந்து வரும் போர் சூழல் காரணமாகவும், வறுமையின் காரணமாகவும், பாதுகாப்பான இடங்களைத் தேடி அந்த நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் வெளியேறி வருகின்றனர்.

அப்படி சில தினங்களுக்கு முன் மெடிட்ரேனியன் கடலில் தத்தளித்த 766 பேர் இத்தாலி கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.

அதே சமயம் லிபிய கடற்பரப்பில் 239 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அச்சம் வெளியிட்டுள்ளது.

இப்படியான சூழலில் அகதிகளாக கடல் வழியே தங்கள் நாட்டில் தஞ்சம் கோருபவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் புதிய சட்டத்தினை ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் எப்போதும் இல்லாத அளவில் 2.13 கோடி அகதிகள் பாதுகாப்பான நாடின்றி தவிப்பதாக ஐ.நா. சுட்டிக் காட்டியுள்ளது.