கிரக பிரவேசத்தின்போது கவனத்தில் வேண்டியவை

இந்தியாவில் வீடு தொடர்பான எந்தவொரு வேலையைத் தொடங்கும்போதும் அதை சுப முகூர்த்த தினங்களில் செய்வது வழக்கமாக இருந்துவருகிறது. மேலும் கட்டி முடித்த வீட்டில் முதல் தடவையாக நுழைகின்ற கிரக பிரவேச சடங்கை நடத்துவதற்கும் சுப முகூர்த்த தினமே தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதேநேரத்தில் கிரக பிரவேச சடங்கை நடத்துவதற்கு சில தினங்கள் சிறப்பானவையாக கருதப்படுகின்றன.

பஞ்ச பூத அடிப்படை :

கிரக பிரவேச சடங்கு வீட்டின் உரிமையாளரின் நலத்தை மட்டுமின்றி அவரைச் சார்ந்து இருக்கும் ஒட்டுமொத்த குடும்பத்தின் நலத்தையும் கருத்தில் கொண்டு நடத்தப்படுகிறது. வீடு என்பது ஆகாயம், பூமி, நீர், நெருப்பு மற்றும் காற்று ஆகிய பஞ்ச பூதங்களைக் கொண்டு கட்டப்படுகிறது. இவற்றை முறையாக அமைத்தால்தான் வீட்டில் மகிழ்ச்சியும் நல்ல உடல்நலமும் சகல வளங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன் அடிப்படையில், ஒரு புதிய வீட்டிற்குள் நல்ல நேரத்தில் குடியேறும்போது வாழ்க்கை எளிதானதாக மாறுகிறது, குடும்பத்தின் கஷ்டங்கள் குறைகிறது என்று கருதப்படுகிறது.

சிறந்த நாட்கள் :

கிரக பிரவேசத்திற்கான சிறந்த நாட்களாக வசந்த பஞ்சமி, அக்‌ஷய த்ரிதியை, சித்திரை முதல் தேதி, தசரா என்று அழைக்கப்படும் விஜயதசமி ஆகியவை அமைந்துள்ளன.

உத்தராயன காலக்கட்டத்திலும் ஹோலி பண்டிகை தினத்திலும் சிரார்த்த தினங்களிலும் கிரக பிரவேசத்தை தவிர்ப்பது நல்லது.

முக்கிய பூஜைகள் :

கிரக பிரவேசத்தின்போது ஒரு வெண்கல சொம்பு பாத்திரத்தில் தண்ணீரும் நவ தானியங்களும் நாணயங்களும் நிரப்பி அதன்மீது தேங்காயை வைத்து மந்திரங்களை உச்சரித்தபடி வீட்டிற்குள் நுழைவது முக்கியமான சடங்காகும். இதற்கு கலச பூஜை என்று பெயர். கணேஷ் பூஜை, நவகிரகங்களுக்கு வணங்கும் நவகிரக பூஜை, வாஸ்து பூஜை ஆகியவற்றையும் கிரக பிரவேசத்தின்போது செய்ய வேண்டும்.

குடியேறுவதற்கு முன்பு ஒரு வீட்டில் கிரக பிரவேசம் செய்ய வேண்டியது அவசியமாகும். வீட்டில் குடியேறும்போது அது முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு கூரை தயாரான நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். நிலை, கதவு, ஜன்னல்கள் ஆகிய வேலைகளும் முடிந்திருந்தால் மிகவும் நல்லது.

தலைவாசல் :

வீட்டிற்குள் நுழையும் முதன்மை கதவு வளங்களையும் செல்வத்தையும் வரவேற்கிறது என்பது நம்பிக்கை. வீட்டின் கதவே வாஸ்து புருஷனின் முகமாகவும் கருதப்படுகிறது. எனவே கிரக பிரவேசத்தின்போது வீட்டின் முதன்மைக் கதவை பூக்களைக் கொண்டும் தோரணங்களைக் கொண்டும் அலங்கரிக்க வேண்டியது அவசியம். மாவிலை தோரணங்களைக் கொண்டு வீட்டின் கதவை அலங்கரிப்பது மிகவும் நல்லது.

பூஜையறைக்கு ஏற்ற திசை :

குடியேறும் தினத்தன்று வீட்டின் பூஜையறை வடகிழக்கு பாகத்தில் அமைப்பது நலம் சேர்க்கும். சாமி விக்கிரகங்களை வீட்டில் கிழக்கு பார்த்த திசையில் வைக்க வேண்டும். கிரக பிரவேசம் செய்வதற்கு முன்பு வீடு முழுவதையும் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தரையை சுத்தம் செய்யும்போது உப்பை பயன்படுத்துவது நல்லது.

வாசலில் கோலம் :

வீட்டிற்குள் முதல் தடவையாக நுழையும்போது வலது காலை எடுத்து வைத்து நுழையவும். வாசலில் மாக்கோலமிட்டு மலர்களைக் கொண்டு அலங்கரிக்க வேண்டும். வீட்டு வாசலில் கோலமிடுவது திருமகளை வரவேற்பதன் அடையாளம்.