நியூயார்க்கில் தாக்குதல் நடத்த திட்டமிடும் அல்கொய்தா தீவிரவாதிகள்!

அமெரிக்க அதிபர்தேர்தல் நாளான 8-ந்தேதி நியூயார்க்கில் தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் வருகிற 8-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிபர் தேர்தல் நடக்கிறது. அதில் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.

இருந்தாலும் பெரும்பாலான மக்கள் தேர்தல் நாளன்று ஓட்டு போட தயாராகி வருகிறார்கள். எனவே ஓட்டுசாவடிகளில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் வாக்குப்பதிவு அன்று நியூயார்க்கில் மீண்டும் பயங்கர தாக்குதல் நடத்த அல்கொய்தா தீவிரவாதிகள் திட்டம் தீட்டியிருப்பதாக ‘எப்.பி.ஐ.’ உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கடந்த 2001-ம் ஆண்டு நியூயார்க்கில் இரட்டை கோபுரங்கள் மீது விமானங்களை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நியூயார்க் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. நியூயார்க் போலீஸ் துறையும், நியூயார்க் மற்றும் நியூஜெர்சி துறைமுக நிறுவனமும் இணைந்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலையங்கள், சுரங்க ரெயில் நிலையங்கள், பாலங்கள் மற்றும் நியூயார்க் நகரை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.