ஈழத் தமிழர்களுக்கு கானாவில் அதியுயர் விருது

மேற்கு ஆபிரிக்கா நாடாகிய கானா நாட்டின் சிறந்த ஏற்றுமதி தொழிலதிபர்களுக்கு வழங்கப்படுகின்ற ஜனாதிபதி உயர் விருது, இவ்வருடம் ஈழத் தமிழர் இருவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கணேசராசா சதீசன் மற்றும் கரணவாய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குகதாசன் ஆகிய இருவரும் இணைத்து 2000 ஆம் ஆண்டுமுதல் கானா நாட்டில் விவசாய மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதியை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அண்மைக்காலமாக கானா நாட்டிற்கு ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கின்ற முன்னணி தொழிலதிபர்களாக மேற்குறித்த இருவரும் திகழ்ந்து வருகின்றனர்.

அந்தவகையில், கடந்த வருடம் இரண்டாம் இடத்தை பெற்று வெள்ளிப் பதக்கத்தினை பெற்றுக் கொண்ட இவர்கள், இவ்வருடம் கானா நாட்டு தொழிலதிபர்கள் அனைவரையும் பின்தள்ளி முதலாம் இடத்தை பிடித்துள்ளனர்.

இதனால், கானா நாட்டில் வருந்தோறும் வழங்கப்படுகின்ற சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கான ஜனாதிபதி விருதும் தங்கப் பதக்கமும் இவர்களுக்கு கிடைத்துள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் தொழிலதிபர்களில் ஒருவரான கணேசராசா சதீசன், சிறந்த திட்டமிடலுடன் மனந்தளராத முயற்சியும் கடின உழைப்புமே முகவரி அறியாத தேசத்தில் கால்பதித்த தமக்கு உயர் விருதினை பெற்றுத் தந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.