சிவபெருமானின் 64 திருக்கோலங்கள் பற்றி சிறப்புப் பார்வை!

சிவபெருமானின் 64 திருக்கோலங்கள் பற்றிப் பார்ப்போம்…

தன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் இறைவன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல உண்டு.

*சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன அவற்றை தொடர்ச்சியாக பார்ப்போம்*.

*1. சந்திரசேகரம் வடிவம்*

*சூரிய ஒளியைப் பெற்று இரவின் இருளை அகற்றும் பொருட்டு உதித்தவன் சந்திரன், அவனுக்கு தட்சன் எனும் அரசனின் சாபத்தால் தான் கற்றுணர்ந்த கலைகள் ஒவ்வொன்றும் நாள்கணக்கில் குறைந்தது, அவை அனைத்தும் தன்னை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்சி சிவனை சரணடைந்தான், இறைவனும் வளர்ந்து தேயும் மரணமில்லா வாழ்வை அளித்து அதன் அடையாளமாக பிறை நிலவைத் தன் தலையில் சூடிக் காட்சியளித்த திருக்கோலம் சந்திரசேகரம் ஆகும்*.

*2. அர்த்தநாரீசுரம் வடிவம்*

*ஆணும் பெண்ணும் சரிசமம், சக்தி இல்லையேல் சிவமில்லை என்று உமையொருபாகனாகக் காட்சியளித்த அம்மையும் அப்பனுமான திருக்கோலம் அர்த்தநாரீசுரம் ஆகும்*.

*3. சக்கரபிரதானம் வடிவம்*

*ஆனந்தத் தாண்டவமாடும்போது, சிவன் தன் கால்களால் வரைந்தது சக்கர உருவம், அதைக் கைலாயத்திலிருந்து பெயர்த்தெடுத்த சலந்தரன் தன் தலைமுடியில் வைத்து சக்தி பெற எண்ணினான், முடி மீது வைத்த நொடி அச்சக்கரம் அவனை அழித்தது*.

*மகாவிஷ்ணு இச்சக்கரத்தைப் பெற விரும்பி, தினசரி சிவனைத் தியானித்துத் தினமும் ஆயிரம் மலர் கொண்டு பூஜித்தார், திருவிளையாடல் நிகழ்த்த எண்ணிய சிவன் ஒரு மலரை ஒரு நாள் மறைத்து விட்டார்*.

*மகாவிஷ்ணுக்கு ஒரு மலர் குறைந்தது தெரிய வந்ததும், தன் வலக்கண்ணைப் பிடுங்கிச் செம்மலராகக் கருதி அர்ச்சித்தார்*.

*இதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் திருமாலுக்கு அந்தச் சக்கரத்தையும், இழந்த கண்ணினையும், செந்தாமரைக் கண்ணன் என்ற பெயரினையும் அளித்து அருளிய கோலம் சக்கரபிரதானம்*.

*4. தட்சிணாமூர்த்தம் வடிவம்*

*படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா, கலைகளின் அரசி சரஸ்வதி, இவர்களின் புத்திரர்களான சனகர், சனாதரர், சனந்தனர், சனத்குமார் ஆகிய நான்கு பேருமே மெய்நூல்களின் உண்மைப் பொருளோ, தத்துவமோ அறியவில்லை, சிவபெருமான் மௌனகுருவாய் யம திசையான தென்திசை நோக்கி அமர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்திய திருக்கோலம் தட்சிணாமூர்த்தம்*.

*5. லிங்கஸ்வரூபம் வடிவம்*

*பிறப்பு, இறப்பின்றி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகளை தன்னுள் அடக்கி ஐம்புலன்களை உணர்த்துவது லிங்கஸ்வரூபம்*.

*6. லிங்கோற்பவம் வடிவம்*

*பிரம்மனும், விஷ்ணுவும் தாங்களே பெரியவர் எனும் கர்வத்தில் இருந்தனர். அப்போது அக்கினிப் பிழம்பாக சிவன் தோன்றிய போது அடிமுடி காணாதவர்களாகக் கர்வம் அடங்கினர், தீப்பிழம்பு லிங்கத் தோற்றமே “லிங்கோற்பவம்”*.

*7. தட்சயக்ஞ பங்கம் வடிவம்*

*சிவபெருமானை அழைக்காமல் தட்சன் எனும் அரசன் யாகம் செய்தான். மரியாதை செய்யாத தட்சன் மீது கொண்ட கோபத்தால் அவன் வேள்வியை அழித்தும் பாடம் சொன்ன கோலம் “தட்சயக்ஞ பங்கம்”*.

*8. சந்தத நிர்த்தனம் வடிவம்*

*படைத்தல், காத்தல், அழித்தல், அழித்ததை மறையும்படி செய்தல், மறைந்ததை மீண்டும் அருளல் ஆகிய ஐந்து தொழில்களும் சரிவர நடக்கும்படி ஆடிக் கொண்டிருக்கும் நடராஜத் திருக்கோலம் “சந்தத நிர்த்தனம்”*.

*9. சண்டே சாதுக்ரகம் வடிவம்*

*தன்னை பூஜித்த சண்டேசுவர நாயனாருக்கு அருளிச் செய்த கோலம் “சண்டே சாதுக்ரகம்”*.

*10. சலந்தரவதம் வடிவம்*

*சக்கரத்தினை தனக்குடைமையாக்க முற்பட்ட சலந்திரனை வதம் செய்த திருக்கோலம் “சலந்தரவதம்”*.

*11. அகோராஸ்திரம் வடிவம்*

*சப்ததந்து என்ற அரசன் அனைவருக்கும் சிரமங்களைக் கொடுத்து வந்தான், அகோராஸ்திரம் என்ற கூரிய ஆயுதத்தால் அவனைக் கொன்றார், அவன் மனைவியர் மன்றாட, அவனை உயிர்த்தெழச் செய்த திருக்கோலம் “அகோராஸ்திரம்”*.

*12. ஏகபதம் வடிவம்*

*இவ்வுலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் தம்முடைய மலரடியில் தாங்கி நின்ற காட்சி “ஏகபதம்”*.

*13. அச்வாருடம் வடிவம்*

*மாணிக்கவாசகரைக் காத்தருளும் வண்ணம் நரியினை பரியாக்க அப்பரியினை ஓட்டும் சேவகராக பாண்டிய மன்னர் முன் எழுந்தருளிய கோலம் “அச்வாருடம்”*.

*14. சத்ய சதாசிவம் வடிவம்*

*சத்ய சொரூபம், பஞ்சமுகங்களாய்த் தோன்றி சத்தியஜோதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகியவற்றினைக் கொண்டு வேத ஆகமங்களைப் போதித்த திருக்கோலம் “சத்ய சதாசிவம்”*.

*15. மிக்க சதாசிவம் வடிவம்*

*இருபத்தைந்து திருமுகங்களுடன் விஸ்வரூபமாய் நின்ற கோலம் மிக்க “சதாசிவம்”*.

*16. தகுல குளேசுவரம் வடிவம்*

*உலோகங்களில் சிறந்த இலகுளத்தால் செய்யப்பட்டு மணிகள் அழகுடன் கோர்க்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம் தகுல “குளேசுவரம்”*.

*17. சகஜ சுகாசனம் வடிவம்*

*ஆறு திருக்கரத்துடன் பார்வதிதேவியைத் தன் இடப்பக்கத்தில் அமர்த்திக் காட்சிதரும் கோலம் “சகஜ சுகாசனம்”*.

*18. கூர்ம சங்காரம் வடிவம்*

*பாற்கடல் கடைய விஷ்ணு ஆமை வடிவம் எடுத்துத் தேவர்களுக்கு உதவினார், கர்வமடைந்த விஷ்ணு ஆமை வடிவத்தை அகலப்படுத்திக் கொண்டே போக பாற்கடல் கரைபுரண்டது, அனைவரும் எம்பெருமானிடம் வேண்டி நிற்க ஆமையைப் பிளந்து அதன் ஓட்டை அணிந்து காட்சியளித்த கோலம் “கூர்ம சங்காரம்”*.

*19. மச்சாரி வடிவம்*

*சோமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினார், மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் மச்சாவதாரம் (மீன்) எடுத்துக் கடலுக்குச் சென்று அசுரனை அழித்தார், திருமால் கர்வம் கொண்டு பாற்கடல் கலக்கினார், சிவன் அக்கணம் தோன்றி மீனின் கண் மலர்களைப் பிடுங்கி அணிந்த கோலம் “மச்சார்”*.

*20. வராஹரி வடிவம்*

*மகாவிஷ்ணு இரணியாட்சன் என்கிற அசுரனைப் பன்றி உருவம் கொண்டு வதைத்தார், பின்னர் கர்வத்திற்கு ஆட்பட்ட அப்பன்றி உலக மக்களைத் துன்புறுத்தியது, அப்பன்றிகள் கோரப்பல்லினைப் பிடுங்கி சிவன் அணிந்து கொண்டு காட்சியளித்த கோலம் “வராஹரி”*.

*21. சற்குரு மூர்த்தம் வடிவம்*

*மனத்தின் அறியாமை அகற்ற மாணிக்க வாசகருக்கு அருள் பொழிய குரு வடிவில் வந்த கோலம் “சற்குரு மூர்த்தம்”*.

*22. உமேசம் வடிவம்*

*பார்வதி தேவியைத் தம் இடப்பாகத்தில் இருத்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவராசிகளைப் படைக்கப் பிரம்ம தேவனுக்கு அருளிய திருக்கோலம் “உமேசம்”*.

*23. உமாபதி வடிவம்*

*சிவன், சக்திக்கு ஐந்து தொழில்களையும் செய்து வர அருள் வழங்கிய “கோலம் உமாபதி”*.

*24. ஐயபுஜங்கத்ராசம் வடிவம்*

*பரமேசுவரனிடம் கோபம் கொண்ட முனிவர்கள் ஒரு சிலர் யாகம் செய்து தோன்றிய பாம்புகளை அவர் மீது தவவலிமையால் ஏவி விட்டனர், மரணமில்லா பெருவாழ்வு உடைய ஐயன் அப்பாம்புகளை ஆடையாக்கி அணிந்த கோலம் “ஐயபுஜங்கத்ராசம்”*.

*25. சார்த்தூரஹரி வடிவம்*

*மீண்டும் முனிவர்கள் தாருக வனத்தில் யாகத்தில் தோற்றுவித்த புலியைக் கொண்று அதன் தோலினை ஆடையாக உடுத்திய கோலம் “சார்த்தூரஹரி”*

*26. பைரவம் வடிவம்*

*அந்தகாசுரனை சிவன் சூலத்தால் கொன்று அச்சூலத்திலேயே அவனை அணிகலன் ஆக்கினார், அங்கிருந்தபடியே அவன் சிவனைத் துதிக்க மகிழ்ந்த ஈசன் காட்சி அளித்து சிவகணங்களுள் ஒருவனாக்கி அருளிச் செய்த கோலம் “பைரவம்”*.

*27. கல்யாணசுந்தரம் வடிவம்*

*தட்சணின் புதல்வியான பார்வதி ஈசனை மணக்க வேண்டி தவம் இருந்தாள், மகிழ்ந்த சிவபெருமானும் சுந்தரரூபனாய் உமையின் திருக்கரம் பற்றி மணக்கோலத்தில் அளித்த கோலம் “கல்யாண சுந்தரம்”*.

*28. வடுகம் வடிவம்*

*துந்துபி என்ற அசுர மைந்தனான முண்டாசுரன் தேவர்களுக்கு தொல்லை அளித்ததால் அவனை சம்ஹாரம் செய்து வடுகராய்க் காட்சி அளித்த கோலம் “வடுகம்”*.

*29. கிராதம் வடிவம்*

*அரிய சிவதனுசினைப் பெற காட்டில் தவம் பண்ணினான் அர்ச்சுனன், அவன் விரும்பிய வரங்களை வழங்க வேடுவராய்க் காட்சியளித்த கோலம் “கிராதம்”*.

*30. சுந்தர விருஷப ஊர்தி வடிவம்*

*சிவனுக்கு வாகனம் நந்தி திருமாலுக்குத் தாமும் ஈசனைச் சுமந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமிருந்தது, அவர் வேண்டுகோளுக்கு இணங்க ரிஷப வாகனமான விஷ்ணு மீதமர்ந்து உலா வரும் கோலம் சுந்தர “விருஷப ஊர்தி*

*31. விஷாபஹரணம் வடிவம்*

*பாற்கடலைக் கடைந்த போது ஆலகால விசத்தினை உண்டு நீலகண்டராய்க் காட்சியளித்த கோலம் “விஷாபஹரணம்”*.

*32. சுவராபக்ஞம் வடிவம்*

*தேவர்களுக்குள் போர் நிகழ்ந்த போது கிருஷ்ண பகவான் வாணசுரன் மேல் சீதாசுரம் என்ற அஸ்திரத்தை ஏவ, சிவபெருமான் உஷ்ணாசுரம் என்ற அஸ்திரத்தால் காத்தார், அப்போது மூன்று முகம், நான்கு கைகள், ஒன்பது விழிகள், மூன்று பாதங்களுடன் காட்சி அளித்த கோலம் “சுவராபக்ஞம்”*.

*33. துகளறு க்ஷேத்திரபாலகம் வடிவம்*

*பிரளயம் நிகழ்ந்தது, அக்னி சர்வலோகங்களையும் அழித்தது, பின்பு பெருமழை பொழிய உலகமே வெள்ளக் காடாய்க் காட்சி தந்தது. ஜீவராசிகள் எல்லாமே அழிந்தன பூமியை புதுப்பித்து உயிர்களை மீண்டும் படைத்துக் காத்திட அவதரித்த திருக்கோலம் “துகளறு க்ஷேத்திர பாலகம்”*.

*34. தொல்கருடாந்திகம் வடிவம்*

*சிவன் வழிபாட்டில் மெய் மறந்து விஷ்ணு காலம் கடத்தி வந்தார், அவருடைய வாகனமான கருடன் சிவனை பழித்தது, சிவன் சினமுற்று தன் வாகனமான நந்தியின் மூச்சுக் காற்றால் கருடனை அலைக்கழித்தார், அவனுக்குப் புத்திமதி காட்டிய கோலம் “தொல் கருடாந்திகம்”*.

*35. முகலிங்கம் வடிவம்*

*சகலதேவர்களையும் அடக்கி ஐம்புலன்களையும் ஒடுக்கி லிங்கஸ்வரூபமாய்க் காட்சிதரும் சர்வேஸ்வரரின் மலர்ந்த தாமரை போல் புன்சிரிப்பு தரக் காட்சியளிக்கும் கோலம் “முகலிங்கம்*

*36. துங்க கங்காதரம் வடிவம்*

*கைலாயத்தில் ஆனந்தமயமான வேளையில் விளையாட்டால் உமையவள் அவர்தம் இருகண்களையும் பொத்தினாள், எங்கும் இருள் சூழ்ந்தது, பகவான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க உலகம் உய்வுற்றது, அந்த வெப்பத்தில் உமாதேவியின் கைகளில் வியர்வை பெருக்கெடுத்து பெருவெள்ளமாய் உலகினை சூழ்ந்து வர, பெருமான் வெள்ளத்தினை எடுத்துத் தன் ஜடாமுடியில் பொருத்தித் தாங்கினார், கங்காதர மூர்த்தியாகக் காட்சியளித்த திருக்கோலம் “துங்க காங்காதரம்”*.

*37. கங்கா விசர்ஜனம் வடிவம்*

*பகீதரன் என்பவன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர வேண்டி பிரம்மனை நோக்கி தவமிருந்தான், சிவனின் அருளால் தன் லோகத்துக்குக் கிடைத்த கங்கையின் சிறு பகுதியைப் பூமிக்கு அளித்தான் பிரம்மன், வெள்ளமெனப் பெருகி செருக்கோடு ஓடிய கங்கையை மீண்டும் தம் சடைமுடியில் கட்டிப் போட்டார் சிவபெருமான், பகீதரன் மீண்டும் வேண்டிக் கொண்டதற்கு இணங்க கங்கையை முடியிலிருந்து பூவுலகிற்குச் சென்றடைய கட்டளை இட்ட போது செய்த திருக்கோலம் “கங்கா விசர்ஜனம்”*.

*38. சுப சோமஸ்கந்தம் வடிவம்*

*சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெர்ப்புப் பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் விழுந்தன, அணு குழந்தைகளாகி வளர்ந்து சக்தியின் அருளால் ஒன்றாகி ஸ்கந்தனாக விளங்கி சிவனுக்கும் உமாதேவிக்கும் இடையில் அமர்ந்து காட்சி அளிக்கும் திருக்கோலம் “சுப சோமஸ்கந்தம்”*.

*39. சூரசிம்ஹாரி வடிவம்*

*மகவிஷ்ணு நரசிம்ம வடிவம் கொண்டு தூணினைப் பிளந்து இரண்யகசிவு என்ற அரக்கனை வதம் செய்தார், அப்போது வெறி கொண்டு உலகினை அழிக்க முற்படுகையில் சரபடிவம் கொண்ட சிவன் நரசிம்மத்தின் தோலைக் கிழித்து அவருக்குத் தம்நிலை உணர்த்திய கோலம் “சூரசிம்ஹாரி”*.

*40. கமாரி வடிவம்*

*சிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்துச் “சாம்பலாக்கிய கோலம்*

*41. யமாந்தகம் வடிவம்*

*பதினாறு வயதே வாழ்வாய் என வரம் பெற்ற மார்க்கண்டேயனின் உயிர் நீக்க எண்ணி எமன் அவன் மீது பாசக்கயிற்றை வீசினார், மார்க்கண்டேயனோ சிவ நாமம் ஜபித்தபடி அருகிலிருந்த சிவலிங்கத்தினை இருகைகளாலும் பற்றிக் கொண்டான், அவனைக் காத்திட சிவன், எமனை இடதுகாலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயனுக்கு சாகா வரமளித்த கோலம் “யமகாந்தகம்”*.

*42. சசி மாணவபாவம் வடிவம்*

*பிரம்மனின் கர்வத்தினை அடக்க எண்ணித் தன் மகன் முருகனிடமே உபதேசம் பெறச் செய்து உலகிற்கெல்லாம் ஆசான் என்ற தத்துவம் உணர்த்திய கோலம் “சசி மாணவபாவம்”*.

*43. சுபகர பிரார்த்தனை மூர்த்தம் வடிவம்*

*தாருக வனத்தில் கையில் தட்டுடன் ஐயன் வந்த போது மோகினி வடிவம் கொண்ட மகாவிஷ்ணு தம்மை ஆட்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார், வேறொரு சமயம் நிறைவேற்றுவதாகச் சொன்ன கோலம் “சுபகர பிரார்த்தனை மூர்த்தம்”*.

*44. நறுந்திர புராந்தகம் வடிவம்*

*சினம் கொண்ட சிவன் முப்புரத்தையும் எரித்துச் சாம்பலாக்கிய சூரிய கோலம் “நறுந்திர புராந்தகம்”*.

*45. சுரர் பரசும் சுமுக கங்காளம் வடிவம்*

*கங்காளம் என்பதனை அணிகலனாய் அணிந்த திருக்கோலம் “சுரர் பரசும் சுமுக கங்காளம்”*.

*46. ரத்தப் பிட்சைப் பிரதானம் வடிவம்*

*ஆணவம் கொண்டிருந்த பிரம்மனின் தலையைக் கொய்து அந்தத் தலை ஓட்டில் எல்லா தேவர்களின் ரத்தத்தினையும் பிட்சையாக ஏற்ற கோலம் “ரத்தப் பிட்சைப் பிரதானம்”*.

*47. இருஞ்சுடரே சுடர் சரிதுரி வரப்பிரதம் வடிவம்*

*இவ்வுலகை காத்திட பார்வதி தேவியை ஜோதிமயமான பேரொளியுடன் கூடிய கௌரியாக அவதரிக்க வேண்டி அவருக்கு வரமளித்த கோலம் “இருஞ்சுடரே சுடர் சரிதுரி வரப்பிரதம்”*.

*48. மஹாபாசுபர சொரூபம் வடிவம்*

*அர்ச்சுனனின் தவத்தில் மகிழ்ந்து அவருக்குத் தம் பாசுபத படைதனை தந்தருளியக் கோலம் “மஹாபாசுபர சொரூபம்”*.

*49. அணிதோன்று புஜங்கலளிதம் வடிவம்*

*கருடனுக்குப் பயந்து தன்னை அடைக்கலமாயிருந்த பாம்புகளை அழைத்து அதன் அச்சம் அகற்றித் தன் திருமேனியில் அணிஅந்த கோலம் “அணிதோன்று புஜங்கலளிதம்”*.

*50. ரிஷிபாந்திகம் வடிவம்*

*விஷ்ணுவை ரிஷப வாகனமாக்கிட அதன் மீதமர்ந்து காட்சியளித்த கோலம் “ரிஷிபாந்திகம்”*.

*51. தோமறுகஜயுத்தம் வடிவம்*

*தேவர்களை துன்பத்துக்குள்ளாக்கிய கஜாசுரனைக் காசி க்ஷேத்திரத்தில் சம்ஹாரம் செய்து, அந்த யானைத் தோலை உரித்து ஆடையாக்கிக் காட்சி அளித்த கோலம் “தோமறுகஜயுத்தம்”*.

*52. விந்தை விளம்பு கஜாந்திகம் வடிவம்*

*அசுரன் சூபரத்மனின் மகன் பானுகோபன், அவனுடன் இந்திரலோகத்து யானையான ஐராவதம் போர்புரிந்து ஐராவதத்தின் கொம்பு ஒடிந்தது, அது திருவெண்காடு சென்று சிவனை வணங்க அதன் வழிபாட்டில் மகிழ்ந்த சிவன், ஐராவதத்திற்குக் காட்சியளித்த கோலம் “விந்தை விளம்பு கஜாந்திகம்”*.

*53. வீணை தயங்கு தட்சிணாமூர்த்தம் வடிவம்*

*வீணையின் பெருமையை உலகிற்குக் கூற வீணையைக் கையிலேந்திய கோலம் “வீணை தயங்கு தட்சிணாமூர்த்தம்”*.

*54. மேதகயோக வினோதமாதாக தட்சிணாமூர்த்தம் வடிவம்*

*யோகத்தின் பெருமையை உணர்த்திய கோலம் “மேதகயோக வினோதமாதாக தட்சிணாமூர்த்தம்”*.

*55. விமல பிட்சாடனம் வடிவம்*

*தாருக வனத்தில் திருவோட்டினைக் கையிலேந்திய திருக்கோலம் “விமல பிட்சாடனம்*

*56. கவலை யுத்தாரணம் வடிவம்*

*ஆபத்பாந்தவனாய்த் தன்னை வந்தடையும் பக்தர்களின் துயர் நீக்கி இன்பம் சேர்க்கும் கோலம் “கவலை யுத்தாரணம்”*.

*57. வேதகணம் புகழும் விதிசிர கண்டனம் வடிவம்*

*பிரம்மனின் கர்வம் அடக்கத் தலையைத் தன் கை நகத்தால் கிள்ளிய கோலம் “வேதகணம் புகழும் விதிசிர கண்டனம்”*.

*58. கவுரி விலாசமந்விதம் வடிவம்*

*பார்வதி தேவியை மணந்து அவரோடு மீனாட்சி சோமசுந்தரேசுவரராய் விளங்கும் கோலம் கவுரி விலாசமந்விதம்”*.

*59. எழிலரியர்த்தம் வடிவம்*

*மகாவிஷ்ணுவை ஸ்திரீ ரூபமாய்த் தன் உடலில் பாதியாக்கித் தாங்கி நிற்கும் கேசவார்த்தம் என்னும் கோலம் “எழிலரியர்த்தம்”*.

*60. வீரபத்திரம் வடிவம்*

*வீர மார்த்தாண்டன் என்ற அசுரனைக் கொன்று வீரபத்திரராக விளங்கிய கோலம் “வீரபத்திரம்”

*61. திரிமூர்த்தி முப்பாதம் வடிவம்*

*பிரம்மன், விஷ்ணு ருத்ரன் ஆகிய மூவரும் தன்னுள் அடக்கம் எனும் தத்துவம் உணர்த்தும் மூன்று திருவடி உடைய கோலம் “திரிமூர்த்தி முப்பாதம்”*.

*62. மகாவேதாளி நடம் வடிவம்*

*கண்டமுண்டாசுரர்களையும் வதைத்து, கோர ஸ்வரூபமான மகாகாளியுடன் ஆடிய ருத்ர தாண்டவக் கோலம் “மகாவேதாளி நடம்”*.

*63. வெருவரு மேகபதத்திருவரு வடிவம்*

*பிரம்ம விஷ்ணுக்களைத் தன்னுள் அடக்கி ஒரே திருவடியுடன் கூடிய கோலம் “வெருவரு மேகபதத்திருவரு”*.

*64. சிவலிங்கம் வடிவம்*

*ஆகம வேத முதற் பொருளானவன், மங்களமானவன், பிறப்பும் இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை உடையவன் என்பதை உணர்த்தும் கோலம் “சிவலிங்கம்”*.

*சிவபெருமானின் அறுபத்து நான்கு திருக்கோலங்களில் எதைத் தரிசித்தாலும் புண்ணியம் உண்டு*.

*இவையே சிவபெருமான் 64 திருக்கோலங்கள் ஆகும்*.