சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்பவேண்டாம்!

‘ரம்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் ரிஷிகேஷ்- சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் ஜோடியாக நடித்து உள்ளனர். சாய் பிரசாத் டைரக்டு செய்து உள்ளார். விவேக், நரேன், மியா ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, சென்னையில் நடந்தது.

இதில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கலந்துகொண்டு பேசியதாவது:-

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாக அரசு, பாராளுமன்றம், நீதித்துறை, பத்திரிகை ஆகியவை உள்ளன. தற்போது மக்களும் செய்திகளை பரப்ப ஆரம்பித்து உள்ளனர். கல்லூரி மாணவர் ஒருவர் கடலில் மூழ்கி இறந்ததை சிலர் வீடியோவில் படம்பிடித்து பரப்பி இருக்கிறார்கள். அவரை காப்பாற்ற யாரும் முயற்சிக்கவில்லை. இது வேதனை அளிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கு நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன. உயர்ந்த மனிதர்களின் பண்புகள், அன்பு, பாசம், சகோதரத்துவம் போன்ற விஷயங்களை பரவ செய்யலாம். கலவரங்களையோ, வதந்திகளையோ பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.

நான் தற்போது இளைய தலைமுறை நடிகர்களுடனும் நடிக்கிறேன். இது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘ரம்’ படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். அவர் சினிமாவில் அறிமுகமானபோது, ‘ஒய் திஸ் கொலைவெறி…’ பாடலை கேட்டு நான் அவரை பாராட்டினேன். உயர்ந்த இடத்துக்கு வருவார் என்று நம்பினேன். அது நடந்து இருக்கிறது. இப்போது அவர் முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்து இருக்கிறார். ‘ரம்’ திகில் படமாக உருவாகி உள்ளது. முதல் தடவையாக பேய் படத்தில் நடித்து உள்ளேன்.

இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது, “எனக்கு பேய் படங்கள் என்றால் பயம். எனவே, அவற்றை பார்ப்பது இல்லை. முதல் தடவையாக ‘ரம்’ பேய் படத்துக்கு இசையமைத்து உள்ளேன்” என்றார்.

விழாவில், தயாரிப்பாளர்கள் ஞானவேல்ராஜா, விஜயராகவேந்திரா ஆகியோர் கலந்துகொண்டனர்.