ஹிலாரிக்காக யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஷேட வழிபாடு…!

அமெரிக்க ஐனாதிபதித் தேர்தல் இம் மாதம் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகின்றார்.

அவர் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என இலங்கைத் தமிழ் மக்கள் சார்பாக வேண்டுதல் செய்து ஹிலாரிக்கான தமிழ் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று புயாழ். நல்லூர்க் கந்தசுவாமி மற்றும் யாழ்.மரியன்னை தேவாலயம் ஆகியவற்றில் விசேட பூஜை வழிபாடுகளிலும், பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் முன்பாக 1008 தேங்காய்கள் உடைத்தும் கற்பூரம் ஏந்தியும் சிறப்புப் பூஜை வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து யாழ். மரியன்னை தேவாலயத்தில்108 மெழுகுவர்த்தி ஏந்தியும் சிறப்புக் கூட்டுத்திருப்பலி இடம்பெற்றது.

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த விசேட பூஜை வழிபாடுகளில் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த வழிபாடுகளைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,

இலங்கையின் அரசியல் தீர்வுக்காக, இனப்பிரச்சனைக்கு ஒரு நிரந்தரமான தீர்வினை எட்டும் நோக்குடன் இறுக்கமாக இலங்கை மீதான தீர்மானத்தினைக் கொண்டுவருவதற்குக் கடந்த காலங்களில் அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டன் மிகவும் பாடுபட்டார்.

இலங்கையில் நடைபெற்று முடிந்த போர்க்குற்றம், இனப்படுகொலை ஆகியவற்றிற்குச் சர்வதேச நீதி கிடைக்கப்பெற வேண்டும். இதற்கு அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை சாதகமாக அமைந்திருக்க வேண்டும்.

அந்த வகையில் இலங்கையின் சிறுபான்மை தமிழ் மக்களுக்கான உரிமைகள், அபிலாசைகள் இவர்கள் மூலம் கிடைக்கப்பெறவேண்டும் என்ற நோக்கில் நாங்கள் இந்தப் பிராத்தனையில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.