மகாலட்சுமி வழிபாட்டின் போது சொல்ல வேண்டியது

* வேண்டும் வரங்களை அருள்பவளே! மூவுலகத் தையும் பரிபாலனம் செய்பவளே! பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவளே! அச்சம் தீர்ப்பவளே! நல்லோரைக் கரை சேர்ப்பவளே! ஸ்ரீதரனின் துணைவியே! திருமகளே! உன்னைப் போற்றுகிறேன்.

* அறிவின் இருப்பிடமே! அன்பர்களுக்கு வழிகாட்டு பவளே! செயல்களில் வெற்றியைத் தருபவளே! மந்திர வடிவமானவளே! பக்திக்கும், முக்திக்கும் வழிகாட்டுபவளே! என்றென்றும் என் இல்லத்தில் இருந்து நீயே என்னைக்காத்தருள வேண்டும்.

* முதலும் முடிவும் அற்றவளே! மாயோனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளே! ஆதிலட்சுமித்தாயே! அனைத்திற்கும் ஆதாரமே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! வாழ்வின் பண்பும் பயனுமாக இருப்பவளே! ராஜயோகம் தந்தருள்பவளே! தாயே! அருள்புரிவாயாக.

* செந்தாமரைப்பூவில் விரும்பி உறைபவளே! பட்டாடை, பலவித ஆபரணங்களையும் விருப்பத்துடன் அணிபவளே! மகாவிஷ்ணுவின் இதயத்தில் வீற்றிருப்பவளே! ஜகன் மாதாவே! குளிர்ந்த சந்திரன் போல அருட்பார்வைகொண்டவளே! அபயக்கரம் நீட்டி என்னை ஆட்கொள்ள வருவாயாக.

* மாசில்லாத தூயநெஞ்சில் வாழ்பவளே! யாவராலும் விரும்பி வணங்கப்படுபவளே! மங்கல வடிவானவளே! பசுவின் அம்சமாக திகழ்பவளே! பாற்கடலில் பிறந்தவளே! செக்கச் சிவந்தவளே! தூய்மை நிறைந்தவளே! உன் திருவடித் தாமரைகள் என் வீட்டில் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்.

* அமுதம் நிறைந்த பொற்குடத்தை ஏந்தியவளே! அருள் நெஞ்சினர் உள்ளத்தில் உறையும் ஒளியே! சிவந்த இதழ்களைக் கொண்ட இளமயிலே!அலங்கார ரூபிணியே! உன் அருட்பார்வையால் இவ்வுலகை வளம் பெறச் செய்வாயாக.

* பூங்கொடி போன்றவளே! எங்கும் நிறைந்தவளே! மூவரும் தேவரும் போற்றும் முதல்வியே! அலை கடலில் உதித்த அருட்பாவையே! சரணடைந்தவர்களைக் காக்கும் ஜகன்மாதாவே! அஷ்டஐஸ்வர்யங்களையும் தந்தருள்பவளே! அம்மா! உன் குளிர்ந்த பார்வையைக் காட்டி உலகை செழிக்கச் செய்வாயாக.

* பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குணவதியே! சவுபாக்கியம் தந்தருள்பவளே! லட்சுமி தாயே! உன் கருணையால் வீட்டிலும், நாட்டிலும் செல்வ வளம் கொழிக்கட்டும். பயிர்பச்சை செழித்துவளரட்டும். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும்.