முருகப்பெருமான் பற்றிய அரிய தகவல்கள்

வேடர் வடிவில் முருகன் :

நெய்வேலி வேலுடையான்பட்டி சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், வேடர் வடிவில் காட்சியளிக்கிறார். கையில் வில்லும், அம்பும் ஏந்தியபடியும், தலையில் இறகுகளை சூடியபடியும், நடந்து செல்லும் பாவனையில் இந்த உருவம் அமைக்கப்பட்டுள்ளது.

நாகாபரண முருகர் :

சேலம் மாவட்டம் கபிர்மலையில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த ஆலயக் கருவறை குடவரையாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முருகப்பெருமான் பாலமுருகனாக கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். மூலவருக்கு வலதுபுறம் சுயம்பு உருவம் இருப்பதையும் காணலாம். உற்சவர் நாகாபரணத் துடன் காட்சிதருகிறார்.

முருகனுக்கு உதவியவர்கள் :

குழந்தையாக இருந்த முருகன் வலம் வந்த மயில், இந்திர மயில் ஆகும்.

முருகப்பெருமான் சிவ-பார்வதிக்கு நடுவில் இருக்கும் கோலத்திற்கு ‘சோமாஸ்கந்தர்’ என்று பெயர்.

சூரசம்ஹாரத்தில் முருகப்பெருமானுக்கு உதவியவர்கள், வீரபாகு உள்ளிட்ட ஒன்பது வீரர்கள்.

மூலவரும்.. சீபலியும்..

திருச்செந்தூர் திருத்தலத்தின் கருவறையில் வீற்றிருக்கும் முருகப்பெருமான், ஒரு திருமுகத்துடனும், அபயம், வரதம், தாமரை மலர், ஜெபமாலை கொண்ட நான்கு திருக்கரங்களுடனும் நின்ற திருக்கோலத்தில் செந்தில்நாதராக அருள்பாலிக்கிறார். மூலவரின் வலது பாதத்தின் அருகே வெள்ளியால் ஆன சீபலியும், இடது பாதத்தின் அருகே தங்கத்தால் ஆன சீபலியும் உள்ளது. இதனை கேரள மன்னர் மார்த்தாண்டவர்மன் வழங்கியுள்ளார். ‘சீபலி’ என்பதற்கு ‘மூலவரைப் போலவே உள்ள சிறிய விக்கிரகம்’ என்று பொருள்.

கங்கா பூஜை :

திருச்செந்தூர் முருகப்பெருமான் கடலை நோக்கியவாறு வீற்றிருக்கிறார். அவர் ஏன் கடலை பார்த்தபடி இருக்கிறார் தெரியுமா? கங்காதேவி தினமும் உச்சி காலத்தில், இத்தலத்தின் கடலில் வந்து முருகப்பெருமானை தரிசிப்பதாக ஐதீகம். தன்னைத் தேடி வரும் கங்காதேவியை, தினமும் முருகர் பூஜிக்கிறார். ஆகவேதான் உச்சிகால பூஜை முடிந்த பின்பு, ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்து வந்து கடற்கரையில் ‘கங்காபூஜை’ செய்யப்படுகிறது. திருச்செந்தூர் கடலில் நீராடினால், கங்கையில் நீராடிய புண்ணியம் கிட்டும்.