சந்தர்ப்பத்தை சாணக்கியமாக கையாள வேண்டும்: கொண்டாடும் அரசுகளே ஒருநாள் குப்பையிலும் வீசும்!!

அண்மைக்காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனின் கருத்துக்கள் தமிழ் மக்களில் பெருமபாலானவர்களினால் இரசிக்கப்படவில்லை.

குறிப்பாக, யாழ். பல்கலைக் கழக மாணவர்களின் படுகொலை விடயத்தில் எதிர்க் கட்சித் தலைவரின் மென்மையான கண்டனத்தையும் வடக்கு முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட 21 ஆண்டு நிறைவு நிகழ்வில் வெளியிட்ட கருத்துக்களையும் அண்மைய உதாரணங்களாக சொல்ல முடியும்.

இவ்வாறான மென்போக்குகளும் கருத்துக்களையும் பார்க்கும்போது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் தலைவராக இருக்காமல்,அரசாங்கத்தின் விருப்பத்துக்குரிய தமிழ்த் தலைவராக மாறிப்போய்விட்டாரா? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுவதை அவதானிக்க முடிகின்றது.

ஆனால், வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு பெற்றுக்கொள்ளப்படுகின்ற தீர்வே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பிரதிபலிப்பதாக அமையும் என்று சம்பந்தன் கூறியிருக்கின்றார். சமஸ்டி அடிப்படையிலான தீர்வே தேவை என்றும் கூறியிருக்கின்றார்.

இருப்பினும், அரசியல் தீர்வு வரைபை விவாதிக்கும் வழி நடத்தல் குழுவில் ஒரு முக்கிய உறுப்பினராக இருக்கும் சம்பந்தன் அவர்கள் இதுவரை அவ்வாறான பரிந்துரை எதையும் முன்வைக்கவில்லை என்றே தெரியவருகின்றது. பிரதமரைப் பொறுத்தவரை சமஸ்டித் தீர்வை முற்றாகவே நிராகரிக்கின்ற போக்கையே கொண்டிருக்கின்றார்.

தவிரவும், வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்பதே இன்றைய அரசியல் சூழலாகும். ஆரசாங்கமே வடக்கும் கிழக்கும் இணைப்பதை விரும்பவில்லை என்பது ஒரு புறமிருக்க, கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவில் வாழம் முஸ்லிம்களும் வடக்கும் கிழக்கு இணைவதை விரும்பவில்லை என்பதை பகிரங்கமாகவே முன்வைத்து வருகின்றனர்.

வடக்கும் கிழக்கும் இணைந்த தீர்வே தேவை என்று கூறிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணக்கமாக உறவு கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமையே கிழக்கு மாகாண முஸ்லிம்கள் கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தியும், தலைமையை கிழக்கிலிருந்து உருவாக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியும் வருகின்றனர்.

இந்த நிலையில் முஸ்லிம்களை சமரசம் செய்து, புட்டும் தேங்காய்ப் பூவும் கதை கூறி வடக்க கிழக்கு இணைப்புக்கு சம்மதம் பெற்றுவிடலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பகல் கனவு காண்கின்றனர் என்பதே அவர்களுக்கு எதிரான விமர்சனமாக இருக்கின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில்விக்கிரம சிங்க ஆகியோரும் சரி, தென் இலங்கையின் எந்தவொரு தலைமையும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகு ஒரு மாநிலமாகவும், அதற்குள் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் அதிகாரங்களையும் தீர்வாக வழங்கப்போவதில்லை.

இதுவே, பூகோள மற்றும் பிராந்திய அரசியல் போக்கின் யதார்த்தமாக இருக்கின்ற நிலையில், பிரதமர் தலைமையிலான வழி நடத்தல் குழு மூலமாக தமிழ் மக்களுக்கு ஏற்கக்கூடிய தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமா? – என்பதை எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் வெளிப்படையாக தெளிவுபடுத்த வேண்டும் என்பதே அநாதரவாகி நிற்கும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

தமிழ் மக்கள் பெருத்த நம்பிக்கையுடனும், இறுதிச் சந்தர்ப்பமாகவுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து பெரும்பான்மை வெற்றியை வழங்கியிருக்கின்றார்கள். இந்த சந்தர்ப்பம் நழுவ விடப்படுமானால் அந்த பின்னடைவு தமிழ் இனத்தை மேலும் பல கட்ட பின்னடைவுகளுக்கு தள்ளிவிடும் அபாயமுள்ளது.

அரசாங்கத்தை விட்டு பிரிவதும், அரசாங்கத்தை எதிர்ப்பதும் பெரிய காரியங்களல்ல. எந்த அரசு தமிழ் மக்களின் உரிமைகளைத் தர மறுக்கின்றதோ அந்த அரசிடமிருந்து உரிமையை வென்றெடுக்கும் சாணக்கியத்தை கச்சிதமாக நிறைவேற்றுவார்கள் என்றே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள்.

சிங்கள அரசுகள் காலத்துக்காலம் தமது தேவைக்கு ஏற்ப பல தமிழ்த் தலைமைகளை தூக்கி வைத்துக் கொண்டாடி இருக்கின்றன. தமது காரியங்கள் முடிந்ததும் தாம் தூக்கிக் கொண்டாடிய தமிழ்த் தலைவர்களை தொப்பென்று குப்பையில் வீசியும் இருக்கின்றன.

எனவே இன்று சம்பந்தரைக் கொண்டாடும் அரசு தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும்,சவால்களும் சாதகமாக மாறுமாக இருந்தால் சம்பந்தரையும் தூக்கி வீசி விடும். ஆகவே தற்போதைய வாய்ப்பை தமிழ் மக்களுக்கு சாதகமாக நகர்த்தி வெற்றி காணவேண்டிய பொறுப்பு சம்பந்தருக்கு இருப்பதை அவர் மறந்துவிடலாகாது.