வடக்கில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் வடக்கிலுள்ள ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் வெளியேற்றப்படவேண்டும்!

நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் வடக்கில் நிலைகொண்டுள்ள ஒன்றரை இலட்சம் இராணுவத்தினரும் வெளியேற்றப்படவேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவிடம் எடுத்துரைத்துள்ளர்.

சிறீலங்காவுக்கு மீண்டும் ஜிஎஸ்பி வரிச்சலுகை வழங்குவது தொடர்பாக ஆராய கொழும்பு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண முதலமைச்சரை கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தினர்.

இச்சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர்,

இந்தச் சந்திப்பு தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் கூறுகையில், இலங்கையில் தற்போதிருக்கும் நல்லிணக்கம் தொடர்பாகவும் ஆண், பெண் சமநிலை பற்றியும் பெண்களுக்கான வலுவூட்டல் குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

நல்லிணக்கத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதானால், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இந்த அரசாங்கம் முன்வர வேண்டும்.

போர் முடிந்து 7 வருடங்களின் பின்னரும் வடக்கில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினரை நிலைகொள்ளவைத்திருப்பது நல்லிணக்கத்திற்குத் தடையாகவே இருக்கும்.

வடக்கில் பொதுமக்களது 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணி, நிலங்களை படையினர் தம்வசப்படுத்தியுள்ளனர். அவற்றை இதுவரை காணிச் சொந்தக்காரர்களிடம் படையினர் திருப்பிக் கொடுக்கவில்லை.

இது குறித்த விரிவான புள்ளிவிபரம் எங்கள் வசமுள்ளது. காணி உரிமையாளர்களுக்கு இதுவரை எந்த விதமான நஷ்டஈடும் வழங்கப்படவில்லை.

அந்தக் காணிகளை அவர்கள் மீளத்தருமாறு கோரிக்கை விடுத்து வருகின்றபோதிலும், படையினர் அவர்களது காணிகளில் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு அதன் வருமானத்தைத் தாங்களே பெற்றுக்கொள்கிறார்கள்.

ஆனால், வளமிக்க இந்தக் காணிகளைப் படையினரிடமிருந்து மீளப் பெற முடியாது, காணியின் சொந்தக்காரர்கள் அகதி முகாம்களில் உண்ண உணவின்றியும் வாழ்வாதாரம் எதுவுமற்ற நிலையிலும் மிக நீண்ட காலமாக வாழ்கின்றார்கள்.

விவசாயம் செய்தவர்கள் இன்று உணவுக்காக மற்றவர்களை அண்டிப்பிழைக்க வேண்டிய துர்பாக்கிய நிலைமையை இராணுவம் ஏற்படுத்தியுள்ளதுடன், அரசாங்கமும் அது குறித்து தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருவதால் அந்த மக்கள் பட்டினியை எதிர்நோக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மீன்பிடித் தொழிலை செய்வோர் கடலுக்கு சென்று தமது தொழிலை செய்யமுடியாதுள்ளது. வடக்கு கடல்களை தெற்கிலிருந்து வரும் சிங்கள மீனவர்கள் இராணுவத்தின் பாதுகாப்புடன் ஆக்கிரமிக்கின்றனர்.

தங்கள் உரிமையைக் கேட்க முனையும் வடக்கு மீனவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இந்தப் பகுதிகளில் தமிழ் மீனவர்கள் கடற்தொழில் செய்ய முனைந்தால் அது சட்டவிரோதமானதென கூறி அவர்களை படையினர் கைது செய்கின்றனர்.

இவ்வாறான செயல்கள் மூலம் தமிழர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்குகின்றனர். எனவே இராணுவப் பிரசன்னமானது வடக்கில் மக்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பெரும் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன் நல்லிணக்கத்திற்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கின்றது.

இதைவிட வடக்கில் இராணுவத்தினர் பல்வேறு பகுதிகளிலும் தாங்களே ஆரம்பப் பாடசாலைகளை நடத்தி வருகின்றனர். அங்கு தமிழ் யுவதிகளுக்கு அதிகளவில் சம்பளம் கொடுத்து அவர்களைத் தமது நிர்வாகத்தில் வைத்துள்ளார்கள்.

வடக்கில் ஆரம்பப் பாடசாலைகளை நடத்துவதற்கு இராணுவத்தினருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. ஆனால் அவர்கள் தான்தோன்றித்தனமாகவும் தங்களது நன்மைக்காகவும் இவற்றை நடத்துகின்றனர்.

சிவில் பாதுகாப்புப் பிரிவின் கீழ் இவை நடத்தப்படுவதால் பொதுமக்கள் எதனையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

இது வடக்கில் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 344 ஆரம்பப் பாடசாலைகளில் 588 பெண்கள் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகிறார்கள்.

உண்மையில் இந்தப் பாடசாலைகள் வட மாகாண கல்வி அமைச்சின் கீழ் நடத்தப்பட வேண்டும். ஆனால் அதற்கு அனுமதி வழங்காது படையினர் தாங்களே அவற்றை நடத்துகின்றனர்.

மொத்தமாக இந்த ஆரம்பப் பாடசாலைகளில் 689 யுவதிகள் ஆசிரியர்களாகக் கடமையாற்றுகின்றார்கள். எனவே வட மாகாண சபையின் ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களின் எண்ணிக்கைக்கு சமனாக இராணுவத்தினரும் ஆசிரியர்களை நியமித்துள்ளனர்.

இந்த ஆசிரியைகளுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதன் உள்நோக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. இந்தச் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். ஆனால் அவை தொடர்கின்றன.

இதேநேரம், அரச திணைக்களங்களிலிருந்து பொலிஸாருடன் பெண்கள் சம்பந்தமான விடயங்களில் தொடர்புகளை மேற்கொள்ள சில பெண் அலுவலர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பொலிஸ் நிலையங்களுக்கு மாற்றுமாறு கோரியிருந்தார்.

ஆனால், நான் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். எமது பெண் அலுவலர்கள் பொலிஸ் நிலையங்களில் வேலை செய்ய தயார் இல்லை என்பதனை சந்திரிகா அம்மையாருக்கு தெரிவித்தேன்.

பெண்களின் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்வதானால் வேலையற்ற பட்டதாரிகளான எமது யுவதிகளை அரச காரியாலயங்களில் நியமித்து அவர்கள் ஊடாக பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகளை அனுப்ப முடியும் என அறிவுரை வழங்கிறேன்.

அது சம்பந்தமாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது போல் பல்வேறு விடயங்களை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.