இன்று நண்பகல் பல்கலை மாணவர்களை ஜனாதிபதி சந்திப்பு.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எதிர்ப்புத் தொடர்பாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இன்று செவ்வாய்க்கிழமை, பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டமையைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மாணவர் ஒன்றியங்களுடனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உபவேந்தருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக, யாழ்ப்பாணத்துக்கு நேற்றுச் சென்ற சிறைச்சாலைகள் புனரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத விவகாரங்கள் அமைச்சர் சுவாமிநாதன், அங்கு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இச்சந்திப்பு, இன்று செவ்வாய்க்கிழமை, நண்பகல் 12:30 மணிக்கு, கொழும்பில் வைத்து இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.