சுற்றுலா விடுதி அமையப்போகும் இடம் எங்கே? ஆதாரத்தை வெளியிட்டது கூகுல்!

சிவனொளிபாத மலையில் உள்ள வன பாதுகாப்பு பகுதியில் ஒரு சுற்றுலா விடுதி அமைப்பது தொடர்பாக தற்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

சிவனொளிபாத மலையில் உள்ள வன பாதுகாப்பு பகுதியில் இருந்து 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மரே நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள பகுதியே தனியாருக்கு சொந்தமான நிலம் என Google வரைப்பட தேடல் மூலம் ஆதாரம் வெளி வந்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இந்த திட்டத்துடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் தொடர்புப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிட்ட பசில் இந்த திட்டத்திற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

சவூதி முதலீட்டாளர் ஒருவரின் இந்த திட்டத்துக்கும், பைஸர் முஸ்தப்பாவுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.

சிவனொளிபாத மலை பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள ஹோட்டல் திட்டங்களால் அந்த சுற்றாடல் பகுதிக்கு ஏற்படவுள்ள அழுத்தங்கள் மற்றும் பாதிப்பு தொடர்பில் துறைசார் அமைச்சு அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிவனொளிபாத மலையில் உலங்கு வானூர்தி ஒன்று தரை இறங்கியதிலிருந்து இந்த மலை யாருக்கு சொந்தம் என்ற மதப்பிரச்சினையும் எழுந்து வருகின்றது.

இங்குள்ள மலைப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான 82 ஏக்கர் நிலப்பரப்பை ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விற்று இதில் ஒரு ஹோட்டல் அமைப்பதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் வருகின்றது.

அண்மையில் இந்த மலை முஸ்லிம் மக்களுக்கே சொந்தம், சிங்கள மக்கள் இதில் உரிமை கோர முடியாது என்பதற்காக ஒரு காணொளியும் இணையங்களில் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.