உடலுக்கு அயோடின் அவசரமாக தேவைப்படுவதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

தைராய்டு சுரப்பியின் சாதாரண செயல்பாட்டிற்கு அயோடின் மிகவும் முக்கியமானது. அத்தகைய அயோடின் குறைபாடு ஒருவருக்கு ஏற்பட்டால், அதனால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சரி, அயோடின் குறைபாடு இருப்பதை எப்படி கண்டறிவது என்று நீங்கள் கேட்கலாம். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஒருவருக்கு அயோடின் குறைபாடு இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

மலச்சிக்கல்

தைராய்டு ஹார்மோன்கள் உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. உடலில் போதிய அளவில் அயோடின் இல்லாவிட்டால், அதன் காரணமாக குடலியக்கம் பாதிக்கப்பட்டு, மலச்சிக்கலால் அவஸ்தைப்படக்கூடும்.

திடீர் உடல் பருமன்

உடலில் அயோடின் குறைபாடு இருக்கும் போது, மெட்டபாலிசம் பலவீனமாகி, உடலின் ஆற்றல் குறைந்து, கொழுப்புக்களை எரிக்கும் செயல் குறைந்து, உடல் பருமன் அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரால் அளவில் ஏற்றத்தாழ்வு

அயோடின் உடலில் குறைவாக இருந்தால், அதனால் இரத்த கொலஸ்ட்ரால் அளவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.

வறட்சியான சருமம் மற்றும் முக வீக்கம்

முகம் வீக்கத்துடனும் வறட்சியுடனும் இருந்து, தலைமுடி அதிகம் உதிர்ந்தால், அது அயோடின் குறைபாட்டிற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

மிகுதியான குளிர்ச்சி

தைராய்டு சுரப்பியின் செயல்பாடு பலவீனமாக இருக்கும் போது, ஆற்றல் உற்பத்தியில் மாற்றம் ஏற்படும். இதன் காரணமாக மற்றவர்கள் சௌகரியமாக உணரும் போது, மிகுந்து குளிர்ச்சியை உணர்ந்தால், அது அயோடின் குறைபாட்டை உணர்த்தும்.

மன இறுக்கம்

அயோடின் குறைபாடு மன இறுக்கம் மற்றும் இதரை மனநிலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஏனெனில் தைராய்டு ஹார்மோன் நரம்பியல் வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது.

முறையற்ற மாதவிடாய் சுழற்சி

தைராய்டு ஹார்மோன் இனப்பெருக்க ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு, முறையற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும்.

சோர்வு

அயோடின் குறைவாக இருந்தால், அதனால் தைராய்டு ஹார்மோனின் உற்பத்தியில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, அதன் காரணமாக உடலின் ஆற்றல் அளவும் பாதிக்கப்பட்டு, மிகுந்த சோர்வை உணரக்கூடும்.

கழுத்து வீக்கம்

அயோடின் குறைவாக இருந்தால், தைராய்டு சுரப்பி வீங்கி, கழுத்துப் பகுதியை வீங்கச் செய்யும்.