சிக்கலில் மாட்டிக் கொண்ட ரன்பீர் கபூர்

பர்பி (Barfi), வேக் அப் சித் (Wake Up Sid), அஜ் பிரேம் கி காசாப் ஹானி (Ajab Prem Ki Ghazab Kahani) உள்ளிட்ட படங்கள் மூலம் பொலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்த ரன்பீர் கபூர், கடந்த 2023 இல் வெளியான அனிமல் (Animal) படத்தின் மூலம் பிரபலமானார்.

இந்நிலையில், பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் முதல் முறையாக இயக்கியுள்ள வெப் தொடரில் ரன்பீர் கபூர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

நெட்பிளிக்ஸில் தொடர் வெளியான நிலையில், ஒரு காட்சியில் இ-சிகரெட்டுடன் ரன்பீர் கபூர் நடித்தது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவில் இ-சிகரெட் இறக்குமதிக்குக் கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்த நிலையில், வெப் தொடரில் ரன்பீர் கபூர் இ-சிகரெட்டைப் பயன்படுத்தியது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மும்பை காவல்துறையைப் பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே ஓ.டி.டி தளங்களில் அதிகளவிலான ஆபாச உள்ளடக்கங்கள் வெளியாவதால், அதற்கும் சென்சார் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது ரன்பீர் கபூர் விவகாரத்தில் என்ன நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே, இதிகாசக் கதையான இராமாயணத்தில் நடிப்பதால் புகை, மது, அசைவம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டதாக ரன்பீர் கபூர் தெரிவித்த நிலையில், தற்போது இ-சிகரெட் காட்சியால் கூடுதல் சிக்கலில் சிக்கியுள்ளார் ரன்பீர் கபூர்.