15,000 மெற்றிக் தொன் உரத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன (Namal Karunarathna) தெரிவித்துள்ளார்.
அத்துடன் உர இருப்புக்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குருநாகலில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நாட்டில் உரப் பற்றாக்குறையை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும், சிறுபோகத்திற்கு நாட்டில் போதுமான உர இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
உரங்களைப் பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக, சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறினார்.
இதேவேளை,நெல் விதைத்து 45 நாட்கள் கடந்துள்ள போதிலும் உரிய முறையில் உரம் கிடைக்கவில்லை என அரலகங்வில விவசாயிகள் விசனம் தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.