முருங்கை கீரை துவையல் செய்யலாம் வாங்க

உடல் ஆரோக்கியமாக திகழ வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒவ்வொருவரும் தங்களுடைய உணவுப் பொருட்களில் மதிய நேரத்தில் ஏதாவது ஒரு கீரையை எடுத்துக் கொள்வார்கள். அதிலும் குறிப்பாக முருங்கைக் கீரைக்கு மற்ற கீரைகளை விட அதிக அளவு சத்துக்கள் இருக்கிறது. அப்படிப்பட்ட முருங்கைக் கீரையை தினமும் பொறியல், கூட்டு என்று செய்து கொடுத்தால் ஒருவித வெறுப்பு உண்டாகிவிடும். அதனால் முருங்கைக் கீரையை வைத்து துவையல் செய்து கொடுத்தால் போதும். கீரையே பிடிக்காது என்பவர்கள் கூட இந்த முறையில் துவையல் செய்து தர விரும்பி சாப்பிடுவார்கள். இந்த முருங்கைக் கீரை துவையலை எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

தேவையான பொருட்கள் முருங்கைக்கீரை – 2 1/2 கப் எண்ணெய் – ஒரு குழி கரண்டி உளுந்து – 5 டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய் – 5 பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன் சின்ன வெங்காயம் – 30 பூண்டு – 3 பல் இஞ்சி – ஒரு இன்ச் தேங்காய் துருவல் – 1/4 கப் புளி – ஒரு கோலி குண்டு அளவு உப்பு – தேவையான அளவு கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். கடாய் சூடானதும் அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுந்தை சேர்த்து வறுக்க வேண்டும். உளுந்து லேசாக சிவந்த பிறகு அதில் பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் பெருங்காயத் துலையும் சேர்த்து உளுந்து நன்றாக சிவக்கும் வரை வறுக்க வேண்டும்.

பிறகு சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி போன்றவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். சின்ன வெங்காயமும் பூண்டும் அந்த எண்ணெயிலேயே நன்றாக வதங்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு இதில் முருங்கைக் கீரையை சேர்த்து இரண்டு நிமிடம் மட்டும் வதக்க வேண்டும். இரண்டு நிமிடம் கழித்து இதில் தேங்காய் துருவல், புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து தேங்காயின் பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதிக நேரம் வதக்க கூடாது. அப்படி வதக்கினால் முருங்கைக் கீரையில் ஒருவித கசப்பு சுவை உண்டாகிவிடும்.

கடைசியாக கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அணைத்துவிட்டு ஒரு முறை பிரட்டி ஆற வைத்துக் கொள்ளுங்கள். இது அனைத்தும் நன்றாக ஆரிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் முருங்கைக்கீரை துவையல் தயாராகிவிட்டது. இதை இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கும் வைத்துக்கொள்ளலாம். சூடாக வடித்த சாதத்தில் இந்த துவையலை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிணைந்தும் சாப்பிடலாம். குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். எந்தவித அஜீரணமும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.