பாரிய அளவில் உயர்வடைந்த முச்சக்கர வண்டிகளின் விலை!

இலங்கையில் (Sri Lanka) முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை இலங்கை மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் ஆண்ட்ரூ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், புதிய வரி திருத்தத்துடன் புதிதாக இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களின் விலைகளில் பாரிய அதிகரிப்பை காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், புதிய முச்சக்கர வண்டியின் விலை சுமார் 650,000 ரூபாயினால் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிதாக இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிளின் விலை 700,000 ரூபாயாக அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake), பெப்ரவரி முதலாம் திகதி முதல் அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்திருந்தார்.

இதன்போது, வெளிநாட்டு கையிருப்புகளில் வாகன இறக்குமதியின் தாக்கத்தை கவனத்தில் கொண்டு, இந்த முடிவு கவனமாக எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.