நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியில் வேட்பாளர்கள் பெருந்தொகை டொலர்களை விளம்பரங்களுக்கு செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பேஸ்புக் Ad Library மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜூலை 13 முதல் செப்டெம்பர் 10 வரையான காலப்பகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக 49,300 டொலர்களை செலவிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும், அவரை விளம்பரப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள Join Ranil என்ற பேஸ்புக் பக்கத்திற்கு செலவிடப்பட்ட தொகை 38,400 டொலர்களை அண்மித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, ஏறக்குறைய மூன்று மாத காலப்பகுதியில் 90,000 டொலர்களும் இலங்கையின் ரூபா பெறுமதியில் 27 மில்லியன் ரூபாவாகும்.
இந்தத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகையை விட இந்தத் தொகை அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த பட்டியலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இரண்டாமிடத்தில் உள்ளார்.
அமெரிக்க டொலர்
இந்தக் காலப்பகுதியில் அவர் 48,600 அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அநுரகுமார திஸாநாயக்க மூன்றாவது இடத்தில் உள்ளார். இந்தக் காலப்பகுதியில் தேர்தல் பிரசாரத்திற்காக 20,400 டொலர்களை ஒதுக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிதிகள் அமெரிக்காவின் மெட்டா நிறுவனத்திற்கு முழுவதுமாக டொலர்களில் செலுத்தப்பட்டுள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ரூபாய் செலவழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.