வடமாகாண வைத்தியர்கள் தொடர்பில் சர்ச்சை!

வடக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் மருத்துவர்களாக கடமையாற்றி வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் (Suren Raghavan) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை, கொழும்பில் (Colombo) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா (Vavuniya) மற்றும் மன்னார் (Mannar) வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள்.

உயர்தர கல்வி
அவர்கள் இலங்கையில் உயர்தர கல்வியில் சித்தியடையவில்லை.

வடக்கு மாகாண சுகாதர திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வைத்தியர் ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் அத்தோடு அவருக்கு அனுமதி கிடைத்திருக்க வேண்டும்.

தரமான கல்வி
அவர் எங்கு படித்தார் என்பது எமக்கு கவலையில்லை அவர் படித்த கல்லூரி சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும்.

உயர்தரம் இருந்ததோ இல்லையோ என்பது இங்கே கேள்வியல்ல இவர்கள் தரமான கல்வி கற்றார்களா என்பதே முக்கியம்.

உயர்தரம் என்பது எமது நாட்டில் ஒருவரின் வாழக்கையை திசை திருப்பும் ஒரு திருப்பு முனையாக காணப்படுகிறது.

உயர்தரத்தில் 3 ஏ சித்தி பெற்றுள்ள கொழும்பு மாவட்ட பிள்ளைகள் பலர் மருத்துவம் படிக்க இயலாமல் காணப்படுகின்றனர் அவர்களுக்கு நாம் என்ன சொல்லப்போகின்றோம்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.