அந்தகன் திரை விமர்சனம்

டாப் ஸ்டார் பிரஷாந்த் 90 கிட்ஸின் பேவரட் ஸ்டாராக வலம் வந்தவர். இவரை எப்போது பெரிய திரையில் பார்க்கலாம் என்று நினைத்தவர்களுக்கு செம ட்ரீட் ஆக இன்று வெளிவந்துள்ள அந்தகன் எல்லோரும் எதிர்ப்பார்த்த ட்ரீட் ஆக அமைந்ததா, பார்ப்போம்.

பிரஷாந்த் ஒரு பியோனோ ஆர்டிஸ்ட் ஆக இருந்து வருகிறார், அதுவும் பார்வையற்றவராக வருகிறார். அப்படி ஒரு நாள் ப்ரியா ஆனந்த் நட்பு கிடைக்க அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கிறது.

ப்ரியா ஆனந்த் பாரிலேயே ஒரு வேலை பிரஷாந்த்துக்கு கிடைக்க, இதில் வரும் வருமானம் வைத்து லண்டன் போக முயற்சி செய்து வருகிறார். அந்த நேரத்தில் நடிகர் கார்த்திக் அறிமுகம் பிரஷாந்துக்கு கிடைக்கிறது.
கார்த்திக் அவருடைய மனைவியை(சிம்ரன்) திருமண நாள் அன்று சர்ப்ரைஸ் செய்ய, பிராசந்தை வீட்டிற்கு அழைக்கிறார். அங்கு வந்து பார்த்த பிராசாந்திற்கு ஒரு கடும் அதிர்ச்சி.

கார்த்திக் அங்கு இறந்து கிடக்கிறார், சமுத்திரக்கனி மற்றும் சிம்ரனும் இணைந்து இந்த கொலையை செய்ய, இதை பிரசாந்த் பார்க்கிறார், அட அவருக்கு தான் கண் தெரியாதே என்று நீங்கள் கேட்கலாம், ஆமாங்க பிரசாந்த் கண் தெரியாதது போல் நடித்து வருகிறார், இதன் பிறகு நடக்கும் பதட்டமும், சுவாரஸ்யமும் தான் மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

அந்தகன் பாலிவுடில் மெகா ஹிட் ஆன, அந்தாதூன் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே. அதை மிக சிறப்பாக கையாண்டுள்ளார் இயக்குனர் தியாகராஜன்.

அதிலும் கதையை அப்படியே பாண்டிச்சேரி கதைக்களத்திற்கு மாற்றியமைத்து பெரிய மாற்றம் இல்லாமல் அப்படியே எடுத்துள்ளனர்.

அதற்கு பிரசாந்த் அப்படியே பொருந்தி போகிறார், கண் தெரியும் போதே தெரியாதது போல் அவர் நடிக்கும் காட்சிகள் அத்தனை தத்ரூபம், அதை விட உண்மையாகவே அவருக்கு கண் தெரியாமல் போகும் காட்சி அவர் அடையும் பதட்டம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

அதிலும் கார்த்திக் இறக்கும் இடத்தில் நடக்கும் சம்பவங்கள் தெரிந்தும் தெரியாதது போல் பிரசாந்த் பெர்ப்பாமன்ஸ் செய்யும் இடம் டாப் ஸ்டார் தான்.

பிரசாந்திற்கு பிறகு படத்தில் கலக்கியிருப்பதும் சிம்ரன் தான், இதுவரை ஹீரோக்களுடன் வெறும் டூயட் பாடும் ஹீரோயினாக பார்த்த இவர், எதோ சீரியல் கில்லர் போல் மிரட்டியுள்ளார்.

அதிலும் கே எஸ் ரவிகுமாரை அவர் கொல்லும் இடம் அவரின் கொடூர குணத்தின் உச்சத்தை காட்டுகிறது. கோவை சரளா, யோகிபாபு, கே எஸ் ரவிகுமார் என அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர்.

போலிஸ் அதிகாரியாக வரும் சமுத்திரக்கனி ஆரம்பத்தில் வெறப்பாக இருந்தாலும், தன் மனைவி வனிதாவிடம் உண்மை தெரிந்தும் பம்மும் இடம் ரசிக்க வைக்கின்றது.

படத்தின் ஆரம்பம் கதைக்குள் செல்லும் 20 நிமிடம் கொஞ்சம் கொஞ்சம் படம் மெதுவாக செல்கிறது, ஆனால் அதன் பிறகு முக்கியமாக கார்த்திக் கொலைக்கு பிறகு படம் விறுவிறுவென போகிறது.

அதிலும் இரண்டாம் பாதியில் பிரசாந்த் கிட்னி-யை திருட ப்ளான் செய்யும் கும்பல், அவர்களிடம் தப்பிக்கும் காட்சி என பரபரப்பிற்கு பஞ்சமில்லை.

பிரசாந்தின் கதாபாத்திரமே ஒரு பியானிஸ்ட் என்பதால் படத்தின் மிகப்பெரும் பலம் இசை என்பதை உணர்ந்து சந்தோஷ் நாராயணன் கலக்கியுள்ளார், அதோடு ஒளிப்பதிவு பாண்டிச்சேரியை டாப் ஆங்கிள்-ல் காட்டும் ஒரு காட்சியே பிரமிப்பு தான், ஏதோ பாரீன் போல் எடுத்துள்ளனர்.

க்ளாப்ஸ்
படத்தின் திரைக்கதை எங்கும் போர் அடிக்காமல் செல்கிறது.

பிரசாந்தின் நடிப்பு ரசிக்க வைக்கிறது.

சிம்ரன் நீண்ட நாள் கழித்து ஒரு வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.

படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள்.

பல்ப்ஸ்
ஹிந்தியில் ஏற்கனவே பார்த்தவர்களுக்கு இது தானே டுவிஸ்ட் என்று தெரிந்து பார்ப்பது.

மொத்தத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த் இஸ் பேக்.