நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு!

மத்திய மலைநாட்டில் (Upcountry) கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசல்ரி மற்றும் மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமே இவ்வாறு நிரம்பியுள்ளது.

இன்றைய (08) நிலவரப்படி, காசல்ரி நீர்த்தேக்கத்தின் (Castlery Reservoir) நீர்மட்டம் வான்வெளி மட்டத்திலிருந்து 12 அடிக்கு உயர்ந்துள்ளது.

மின்சாரம் உற்பத்தி
இதேவேளை மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கத்தின் (Maussakalle Reservoir) நீர்மட்டம் 11 அடிக்கும் மேல் நிரம்பியுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரிப்பதன் மூலம் 5 நீர்மின் உற்பத்தி நிலையங்களில் அதிகபட்ச கொள்ளளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி விமலசுரேந்திர, லக்சபான, நியூ லக்சபான, கனியன் மற்றும் பொல்பிட்டிய ஆகிய நீர்மின் நிலையங்களில் அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என நீர்மின் நிலைய பொறியியலாளர்கள் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.