லால் சலாம் திரைவிமர்சனம்

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள திரைப்படம் லால் சலாம். விக்ராந்த் – விஷ்ணு விஷால் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். மாபெரும் எதிர்பார்ப்பில் இன்று வெளிவந்துள்ள லால் சலாம் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவிற்கு பூர்த்தி செய்துள்ளது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம்
மொய்தீன் பாய் [ரஜினிகாந்த்] மற்றும் அவரது நண்பர் லிவிங்ஸ்டன் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒற்றுமையாக பழகி வருகிறார்கள். இவர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஊரும் இந்து – முஸ்லீம் என பாகுபாடு பார்க்காமல் அண்ணன், தம்பி போல் வாழ்ந்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த் மூலமாக துவங்கப்பட்ட கிரிக்கெட் அணி தான் 3 ஸ்டார். வெற்றிக்கு மட்டுமே பேர்போன இந்த அணியில் விளையாடி வந்த விஷ்ணு விஷால் திடீரென இதிலிருந்து வெளியேறிய, MCC என்ற அணிக்கு கேப்டன் ஆகிறார்.

இதன்பின் விஷ்ணு விஷால் தலைமையில் செயல்படும் MCC அணி தொடர்ந்து வெற்றிபெற்று வரும் நிலையில், 3 ஸ்டார் அணி தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவி வரும் நிலையில், எப்படியாவது MCC அணியை வெல்ல வேண்டும் என 3 ஸ்டார் முடிவு செய்கிறது.

இதற்காக மும்பையில் இருக்கும் மொய்தீன் பாய் மகனான விக்ராந்த்-ஐ அழைத்து வந்து 3 ஸ்டார் அணியில் விளையாட வைக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள். விக்ராந்த் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்ற கனவுடன் முயற்சி செய்து வருகிறார். அதுவே அவரது தந்தையான ரஜினியின் கனவும் ஆகும்.

சிறு வயதில் இருந்தே விக்ராந்திற்கும், விஷ்ணு விஷாலுக்கும் ஒத்துப்போகாத காரணத்தினால் இருவரும் பார்க்கும் போதெல்லாம் சண்டை போட்டு கொள்கிறார்கள். இப்படியொரு நிலையில், மீண்டும் கிரிக்கெட் களத்தில் இருவரும் மோதிக்கொள்ள, சிலர் அரசியல் ஆதாயத்தை இவர்கள் மூலம் தேடிக்கொள்ள திட்டம்போடுகிறார்கள்.

இதன்பின் என்ன நடந்தது? விளையாட்டில் அரசியல் புகுந்தால் விளையாட்டு வீரரின் வாழ்க்கை என்னவாகும்..! அதன் விளைவுகள் என்னென்ன என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றி அலசல்
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தேர்ந்தெடுத்துள்ள அழுத்தமான கதைக்களத்தை பக்காவாக திரையில் காட்டியுள்ளார். திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு இருந்தாலும், சொல்ல வந்த விஷயத்தை நெற்றிப்பொட்டில் அடிப்பதுபோல் கூறிவிட்டார்.

ஊரில் நடக்கும் திருவிழாவை காட்டிய விதம், மதத்தை வைத்து நடக்கும் அரசியல், அதனால் சீரழியும் இளைஞர்களின் வாழ்க்கை என திரைக்கதையை நன்றாகவே வடிவமைத்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

கடவுளை வழிபாடு செய்யும் விதம், வேண்டுமானால் ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அனைவருக்கும் கடவுள் ஒன்று தான் என ரஜினிகாந்த் பேசும் வசனம் சூப்பர்.

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள், மதத்தை காரணம் காட்டி பிரிவினை உண்டாக்க நினைப்பவர்களுக்கு செருப்படி கொடுத்தது போல் இருந்தது கிளைமாக்ஸ் காட்சி. அதற்காக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு தனி பாராட்டு.

ஏ.ஆர். ரஹ்மானின் பாடல்கள் சூப்பர். குறிப்பாக ரஜினிக்கு போட்ட ஜலாலி பாடலும், தேர் திருவிழா பாடலும் அட்டகாசம். ஆனால், பின்னணி இசை எதிர்பார்த்த அளவிற்கு ஒர்கவுட் ஆகவில்லை. அதுவே படத்தின் முக்கிய மைனஸாக அமைகிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் படத்திற்கு மிகப்பெரிய பலத்தை சேர்க்கிறது.

கதாநாயகர்களாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரின் நடிப்பு பக்கா. ஆனால் இதில் விக்ராந்தின் கதாபாத்திரம் இன்னும் கூட வலுவாக காட்டியிருக்கலாம். அதே போல் விஷ்ணு விஷாலின் தாயாக நடித்த நடிகை ஜீவிதா அசத்திவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். மேலும் செந்தில் மற்றும் தம்பி ராமையா இருவரின் நடிப்பும் எதார்த்தமாக இருந்தது.

திருவிழா சாமிக்காக மட்டும் நடத்தப்படுவது அல்ல, வெவ்வேறு ஊரில் பிரிந்து வாழும் மக்கள் மீண்டும் தனது சொந்த ஊருக்கே வந்து தனது சொந்த பந்தத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதற்காக நடத்தப்படுவது என செந்தில் பேசும் வசனம் உணர்ச்சிவசப்படவைக்கிறது. மேலும், விவேக் பிரசன்னாவின் நடிப்பு கவனத்தை பெறுகிறது.

பிளஸ் பாயிண்ட்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கம்

அழுத்தமான கதைக்களத்தை அழகாக திரையில் காட்டிய விதம்

விஷ்ணு விஷால் – விக்ராந்த் நடிப்பு

ரஜினிகாந்த் நடிப்பு

மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கு செருப்படி கொடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த காட்சிகள்

கிளைமாக்ஸ் காட்சி

பாடல்கள்

மைனஸ் பாயிண்ட்

திரைக்கதையில் சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு

பின்னணி இசை

மொத்தத்தில் லால் சலாம் மக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.