யாழில் பாடசாலை அதிபர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழங்க வேண்டும் என கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

எட்டு அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர்
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு முன்னால் இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தன தலைமையில், வடமாகாண யாழ்ப்பாண மாவட்ட அதிபர் தரத்திற்கு உள்வாங்கப்பட்ட அதிபர்கள் கவனயீர்ப்பு இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போது இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தனவினால் எட்டு அம்ச கோரிக்கைகள் அடங்கிய மகஜர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் ரி.கனகராஜிடம் கையளிக்கப்பட்டது.

போராட்டத்தில் இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் நிறைவேற்றுகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிபர் தரத்தினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், இவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்திலும் மகஜரினையும் கையளிக்கவுள்ளதாக இலங்கை அதிபர் சேவை சங்கத்தின் தலைவர் சிரச ஆரியவர்த்தன தெரிவித்தார்.