Dream Warrior Pictures தயாரிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் ஜப்பான். இது கார்த்தியின் 25வது திரைப்படமாகும்.
இதுவே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் எப்படி நடித்திருப்பார் என்று பார்க்கவும் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருந்தனர்.
அதே போல் ராஜு முருகன் தனது படங்களில் பேசும் அரசியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். அதை ஜப்பான் படத்தில் எப்படி அமைத்துள்ளார் என்பதையும் காண காத்திருந்தனர்.
இப்படி பல எதிர்பார்ப்புகளை கொண்ட ஜப்பான் திரைப்படம் ரசிகர்களை முழுமையாக பூர்த்தி செய்ததா இல்லையா என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதைக்களம்
கொள்ளையடிப்பதில் கைதேர்ந்த நபராக இருக்கிறார் கதாநாயகன் ஜப்பான் [கார்த்தி]. இந்த சமயத்தில் ராயல் தங்க கடைசியில் ரூ. 200 கோடி மதிப்புள்ள நகைகள் திருடப்படுகிறது. இவ்வளவு பெரிய திருட்டுக்கு காரணம் கதாநாயகன் கார்த்தி தான் என போலீஸ் அவரை தேடுகிறது.
ஒரு கட்டத்தில் அவர் போலீஸ் பிடியில் சிக்க, அந்த நகைகளை நான் கொள்ளை அடிக்க வில்லை என்றும், இந்த கொள்ளைக்கு சம்பந்தப்பட்டவன் வேறொருவன், அவன் என்னை இதில் மாட்டிவிட்டு தப்பித்து விட்டான் என கூறுகிறார் ஜப்பான். இதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்
கதாநாயகன் கார்த்தியின் நடிப்பில் ஒரு குறையும் இல்லை. வழக்கம் போல் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார். அதே போல் அவருடன் நடித்த விஜய் மில்டன், சுனில் மற்றும் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோரின் நடிப்பும் ஓகே.
ராதா எனும் கதாபாத்திரத்தில் நடித்த நடிகரின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அவருக்கு தனி பாராட்டுக்கள். ஆனால் கதாநாயகி அனு இமானுவேல் எதற்காக படத்தில் வந்தார் என கேள்வி எழுகிறது. கொஞ்சம் கூட அவருக்கு ஸ்கோப் இல்லை.
கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ஜித்தன் ரமேஷ் கதாபாத்திரமும் வலுவாக இல்லை. திரைக்கதையை பார்க்கும் போது ராஜூ முருகன் தான் இப்படத்தை இயக்கினாரா என கேள்வி எழுகிறது.
அரசியல் வசனங்கள் பக்காவாக இருந்தாலும் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பெரிதளவில் இல்லை. இதுவே படத்திற்கு மிகப்பெரிய மைனஸ். ஜி.வி. பிரகாஷ் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு மற்றும் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு மற்றும் சண்டை காட்சிகள் ஓரளவு ஓகே.
பிளஸ் பாயிண்ட்
கார்த்தி நடிப்பு
கடைசி 25 நிமிட காட்சி
ராதா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்
மைனஸ் பாயிண்ட்
சுவாரஸ்யம் இல்லா திரைக்கதை
பல இடங்களில் ஏற்பட்ட தொய்வு
கதாபாத்திரங்களின் வடிவமைப்பு வலுவாக இல்லை
மொத்தத்தில் ஜப்பான் ஏமாற்றம்