உலகில் ஒவ்வொரு 2 நிமிடங்களிலும் கர்ப்பிணிகள் உயிரிழக்கின்றனர்

உலகில் ஒவ்வொரு 2 நிமிடங்களிலும் பிரசவ மற்றும் கர்ப்பகால கோளாறுகளால் பெண்ணொருவர் உயிரிழக்கிறார் என ஐநா அதிர்ச்சித்தகவலை இன்று தெரிவித்துள்ளது.

அதேசமயம் உலகில் கடந்த 20 ஆண்டுகளில் மகப்பேற்று மரண விகிதம் 34.3 சதவீதத்தினால் குறைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐநாவின் ஏனைய முகவரகங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மரண விகிதம்
2000 ஆம் ஆண்டில் மகப்பேற்று மரண விகிதம் ஒரு லட்சத்துக்கு 333 ஆக இருந்தது. 2020 ஆம் அண்டு 223 ஆக குறைவடைந்துள்ளது. எனினும், 2020 ஆம் ஆண்டில் ஏறத்தாழ 800 பெண்கள் பிரசவம் மற்றும் கர்ப்பகால கோளாறுகளால் இறந்துள்ளனர்.

இது 2 நிமிடங்களுக்கு ஒரு மரணம் என்ற விகித்தில் உள்ளதாக ஐநா சுட்டிக்காட்டியுள்ளது. மேற்படி காலப்பகுதியில் பெலாரஸில் மகப்பேற்று மரணங்களில் அதிக வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறிய ஐநா, வெனிசூவேலாவில் அதிக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் கவலை
2000 முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஐக்கிய அமெரிக்காவில் மகப்பேற்று மரணங்களில் அதிக அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது. ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறுமிக்கும் முக்கிய சுகாதார சேவைகளை பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசர தேவையை இப்புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் அதானோம் கெப்ரியேசுஸ் கூறியுள்ளார்.

2016 முதல் 2020 ஆம் ஆண்டுல் ஐநாவின் 8 வலயங்களில், இரு வலயங்களில் மாத்திரமே மகப்பேற்று மரணவீதங்கள் குறைவடைந்துள்ளன.

அவுஸ்திரேலியா – நியூஸிலாந்து வலயத்தில் 35 சதவீதத்தாலும் மற்றும் மத்திய, தெற்காசிய வலயத்தில் 16 சதவீதத்தாலும் இது குறைவடைந்தது.

இக்காலப்பகுதியில் ஐரோப்பா – வட அமெரிக்காவில் 17 சதவீதத்தால் மகப்பேற்று மரண வீதம் அதிகரித்துள்ளதுடன், லத்தீன் அமெரிக்க நாடுகளில் 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.