பிரித்தானியாவில் பச்சிளம் குழந்தைக்கு எமனான தாய்

பிரித்தானியாவில் பிறந்து எட்டு வாரங்களே ஆன குழந்தையைக் கத்தியால் குத்திக்கொன்ற தாய் வழக்கில், அந்தக் குழந்தையின் தந்தையின் உறவுக்காரப்பெண் ஒருவர் தற்போது Belfast நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார்.

2021ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 27ஆம் திகதி, பிரித்தானியப் பெண் ஒருவர் தனது 8 வாரக் குழந்தையையும், அந்தக் குழந்தையின் அக்காவையும் கத்தியால் குத்திவிட்டு, தன் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

குழந்தைகளைக் கத்தியால் குத்திய அந்தப் பெண், தன் கணவரை மொபைலில் அழைத்து, தான் குழந்தைகளைக் குத்திவிட்டதாகவும், ஆண் குழந்தை இறந்துவிட்டதாகவும், பெண் குழந்தை இரத்தவெள்ளத்தில் துடித்துக்கொண்டு கிடப்பதாகவும், தானும் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் கூறியுள்ளார்.

பொலிஸார் வந்து பார்க்கும்போது, அந்த ஆண் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டிருக்க, இரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த பெண் குழந்தையையும், அந்தப் பெண்ணையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள்.

அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் குழந்தை பிழைத்துக்கொள்ள, அந்தப் பெண்ணும் பிழைத்துக்கொண்டார்.இந்த சம்பவம் நடந்த நாளில், அந்தக் குழந்தைகளின் தந்தையின் உறவினரான ஒரு பெண் அந்த வீட்டுக்கு வந்துள்ளார்.

அவர் தற்போது அன்று நடந்த விடயங்கள் குறித்து சாட்சியமளித்துள்ளார். அவர் வெளியே சென்றிருந்த நேரம் பார்த்து, அந்தத் தாய் தன் குழந்தைகளைக் கத்தியால் குத்தியுள்ளார். அந்த உறவுக்காரப் பெண்ணிடம், அவர் வீட்டிலிருக்கும்போது, கவலைப்படும் அளவுக்கு, அல்லது குறிப்பிடத்தக்க ஏதாவது நிகழ்ந்ததா என கேள்வி எழுப்பப்பட்டது.

அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூறிய அந்தப் பெண், அந்த ஆண் குழந்தை தூங்கிக்கொண்டிருந்ததாகவும், புதிதாகப் பிறந்த தன் தம்பியால் மகிழ்ச்சியடைந்திருந்த அந்த பெண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

குழந்தைகளை வேறொரு நாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதற்கான படிவங்களை அந்தத் தாய் நிரப்பிக்கொண்டிருந்ததாகவும், அதனால் அவர் விரக்தியாக காணப்பட்டதாகவும், தான் வேண்டுமானால் உதவுவதாக கூறியதாகவும் அந்த உறவுக்காரப்பெண் தற்போது நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில் கத்தியால் குத்தப்பட்டு, உயிர் பிழைத்த அந்த பெண் குழந்தையின் எதிர்காலம் கருதி, சம்பந்தப்பட்டவர்கள் யாருடைய பெயரும் வெளியிடப்படவில்லை.