குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு 2 வயது வரை என்ன உணவுகளை கொடுக்க வேண்டும்.

குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கள் தொடர்பாக, குழந்தைகள் நல டாக்டர் எஸ்.முகுந்தன் கூறியதாவது:- நுண்ணூட்டச் சத்து குறைபாடால் குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் எழுகிறது. குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடின்றி ஆரோக்கியமாக இருப்பதற்கு, குழந்தை பிறந்து 6 மாதம் வரையில் கட்டாயம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

தண்ணீர், கிரைப்வாட்டர், தேன், பசும்பால், பவுடர் பால், வாய் சூப்பான் போன்றவற்றை கொடுக்க வேண்டாம். அது கேடு விளைவிக்க கூடியது. 6 மாதத்துக்கு பின்னர் 12 மாதங்கள் வரைக்கும் குழந்தைகளுக்கான இணை உணவுகளையும், 2 வயது வரைக்கும் சத்து மாவுக்களையும் தயார் செய்து வழங்கலாம். இவ்வாறு வழங்குவதன் மூலம் குழந்தைகளின் சரியான ஊட்டச்சத்து அளித்து, ஆரோக்கியமான குழந்தைகளை வளர்க்க முடியும். இதில் குடற்புழுக்களும் குழந்தைகளுக்கு பிரச்சினையை கொடுக்கக்கூடியது.

காய்கறிகள், பழங்களை சுத்தம் செய்யாமல் சாப்பிடுவது, கடைகளில் தின்பண்டங்கள் அதிகம் சாப்பிடுவதால் குடற்புழுக்கள் அதிகமாக வருகிறது. இதற்கான மாத்திரையை 6 மாதத்துக்கு ஒருமுறை சாப்பிட வேண்டும். அவ்வாறு இருந்தும் பூச்சிகள் வரத்தான் செய்யும். இதற்கு நிரந்தர தீர்வு நம்மை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோன்று குழந்தைகளின் ஆரோக்கியத்தில் தடுப்பூசிகள் முக்கியத்துவம் பெறுகிறது. அரசு அளிக்கும் தடுப்பூசிகளை அதற்கென வரையறுக்கப்பட்ட காலக்கட்டத்தில் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.